திருகோணமலை பாலையூற்று பகுதியில் இரு பெண்களை வெள்ளை வேனில் கடத்திச் சென்று சட்டவிரோதமாகத் தடுத்து வைத்திருந்த பின்னர் கொலை செய்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், இரண்டு முன்னாள் கடற்படை வீராங்கனைகளைக் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கைது செய்துள்ளது.
2008ஆம் ஆண்டு மே 13ஆம் திகதி பாலையூற்று பகுதியைச் சேர்ந்த சசிகுமார் தேன்மொழி மற்றும் மேரி டெலிசியா ஆகிய இரு பெண்கள் வெள்ளை வேனில் வந்த கடற்படையினரால் கடத்திச் செல்லப்பட்டதாகத் திருகோணமலை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், குறித்த சம்பவம் தொடர்பில் உரிய விசாரணைகள் இடம்பெறாத நிலையில், கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் 11 பேரை வெள்ளை வேனில் கடத்திச் சென்று காணாமலாக்கியமை தொடர்பான விசாரணைகளின்போது இந்த சம்பவம் குறித்த தகவல்கள் வெளிப்பட்டதாகக் கூறப்படுகிறது.
கேகாலையைச் சேர்ந்த சாந்த என்பவரை அலவ்வ பகுதியில் வைத்துக் கடத்திச் சென்றமை தொடர்பான விசாரணைகளின்போது இரண்டு முன்னாள் கடற்படை வீராங்கனைகள் கைது செய்யப்பட்டிருந்தனர். சந்தமாலி மற்றும் காவோஸ் என அடையாளம் காணப்பட்டுள்ள அந்த இருவரிடமும் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளில், திருகோணமலை கடற்படை முகாமில் இயங்கியதாகக் கூறப்படும் தடுப்பு முகாம் தொடர்பான தகவல்கள் வெளிப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சசிகுமார் தேன்மொழி மற்றும் மேரி டெலிசியா ஆகியோரின் கடத்தல் மற்றும் கொலை தொடர்பாகத் திருகோணமலை நீதிவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ‘பி’ அறிக்கையின் அடிப்படையில் மேலதிக விசாரணைகளைக் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கையேற்றுள்ளது.
கேகாலை சாந்தவின் கொலை வழக்கில் பிணை நிபந்தனைகளின்படி கையெழுத்திடுவதற்காக நேற்று (21) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்குச் சென்றிருந்தபோதே, இரு முன்னாள் கடற்படை வீராங்கனைகளும் இந்த இரட்டைக் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட இருவரையும் இன்று திருகோணமலை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.








