மன்னார் வடக்கு கடற்பகுதியில் விபத்தில் சிக்கிய ஒரு நாள் மீன்பிடிப் படகில் இருந்த இரண்டு மீனவர்கள், கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தின் ஒருங்கிணைப்பில், கடற்படையினரால் இன்று (21) அதிகாலை மேற்கொள்ளப்பட்ட விசேட தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கையின் மூலம் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் குருநகர் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடந்த 19ஆம் திகதி இரண்டு மீனவர்களுடன் புறப்பட்ட ஒரு நாள் மீன்பிடிப் படகு மீண்டும் மீன்பிடித் துறைமுகத்திற்குத் திரும்பாததால், அந்தப் படகைக் கண்டுபிடிப்பதற்குக் கடற்படையின் உதவியை வழங்குமாறு மீன்பிடி மற்றும் நீர்வாழ் வளங்கள் திணைக்களத்தினால் கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திற்கு அறிவிக்கப்பட்டது.
அந்த அறிவித்தலுக்கு உடனடியாகப் பதிலளித்த கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையம், அந்தக் கடற்பகுதியில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடும் படகுகளுக்கு இது தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு மீன்பிடி மற்றும் நீர்வாழ் வளங்கள் திணைக்களத்திற்கு அறிவுறுத்தியதுடன், தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கையை மேற்கொள்வதற்காக வடக்கு மற்றும் வடமத்திய கடற்படை தளபத்தியங்களுக்கும் அறியத்தந்தது.
அதன்படி, வடமத்திய கடற்படை கட்டளையினால் மேற்கொள்ளப்பட்ட தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கையின் மூலம், தலைமன்னாருக்கு வடக்கு கடற்பகுதியில் எரிபொருள் இன்றி செயலிழந்து மிதந்துகொண்டிருந்த ஒரு நாள் மீன்பிடிப் படகு கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, அதில் இருந்த இரண்டு மீனவர்களும் இவ்வாறு பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். மேலும், அந்த மீனவர்களும் மீன்பிடிப் படகும் தலைமன்னாருக்குக் கொண்டுவரப்பட்டதுடன், அங்கு மீனவர்களுக்குத் தேவையான மனிதநேய உதவிகளும் வழங்கப்பட்டன.
மேலும், கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தின் ஒருங்கிணைப்பில், இலங்கைக்குச் சொந்தமான கடல்சார் தேடல் மற்றும் மீட்பு வலயத்திற்குள் ஆபத்தில் சிக்கித் தவிக்கும் கடற்படை மற்றும் மீனவ சமூகத்திற்கு நிவாரணம் வழங்குவதற்காக, தயார் நிலையில் உள்ளதாகக் கடற்படை அறிவித்துள்ளது.








