சுமார் ரூ.24.8 பில்லியன் மதிப்பிலான வெளிநாட்டு நாணயங்களை தந்திக் பரிமாற்றங்கள் (TT) மூலம் வெளிநாட்டுக் கணக்குகளுக்கு அனுப்பியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு (FCID) கொட்டிக்காவத்தையில் ஒருவரைக் கைது செய்துள்ளது.
பொலிஸாரின் தகவலின்படி, குறித்த நிதிப் பரிமாற்றங்கள் 2024 டிசம்பர் முதல் 2025 நவம்பர் வரையிலான காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இலங்கைக்கு எவ்வித பொருட்களும் இறக்குமதி செய்யப்படாத நிலையில், குறித்த நிதி வெளிநாட்டுக் கணக்குகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக புலனாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிதிப் பரிமாற்றங்களின் பின்னணி, தொடர்புடைய கணக்குகள் மற்றும் இதனுடன் சம்பந்தப்பட்ட ஏனைய விடயங்கள் குறித்து FCID மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது.








