முல்லைத்தீவு – கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கொக்குத்தொடுவாய் மத்தி, குஞ்சுக்கால்வெளி பகுதியில் தனியார் காணிகளை ஆக்கிரமித்து மேற்கொள்ளப்படும் சட்டவிரோத உப்பள அமைப்புப் பணிகளை உடனடியாக நிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கரைதுறைப்பற்று பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக இந்தத் தீர்மானம் கடந்த 21ஆம் திகதி நிறைவேற்றப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் மொத்தம் 44.197 ஏக்கர் காணி உப்பளத்திற்காக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் சுமார் 31 ஏக்கர் தனியார் காணிகளாகவும், 13 ஏக்கர் 02 ரூட் அரச காணிகளாகவும் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலஅளவைத் திணைக்களத்தின் சுவட்டு வரைபடத்தின் அடிப்படையில், குறித்த பகுதி கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்கும் கொக்குத்தொடுவாய் மத்தி கிராம அலுவலர் பிரிவுக்கும் உட்பட்டது என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, குறித்த உப்பள செயற்பாட்டினால் கொக்கிளாய் கடல்நீரேரியில் மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்கள் மற்றும் விவசாயிகள் பாதிக்கப்படக்கூடும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சட்டவிரோத உப்பள அமைப்புப் பணிகளை உடனடியாக நிறுத்துவதுடன், அதற்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கரைதுறைப்பற்று பிரதேச சபைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், ஒருங்கிணைப்புக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மாவட்ட அபிவிருத்திக்குழுவிற்கு அறிவிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.








