வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக சவூதி அரேபியா சென்ற இலங்கைப் பெண் ஒருவர் கடந்த 14 ஆண்டுகளாக எவ்வித தகவலுமின்றி காணாமல் போயுள்ளதாக அவரது குடும்பத்தினர் கவலை தெரிவித்துள்ளனர்.
அம்பன்பொல, சேருகொட பகுதியைச் சேர்ந்த ராஜபக்ஷலாகே நிலூகா ராஜபக்ஷ என்ற பெண்ணே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.
கிடைக்கப்பெற்ற தகவல்களின்படி, அவர் 2012ஆம் ஆண்டு ஏப்ரல் 10ஆம் திகதி சவூதி அரேபியாவுக்குச் சென்றுள்ளார். இதுவரை அவரைப் பற்றிய எந்தவொரு உறுதியான தகவலும் கிடைக்கவில்லை.
இது தொடர்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பலமுறை முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன், ஜனாதிபதி செயலகத்துக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், இதுவரை அவருக்கு என்ன நேர்ந்தது என்பது தெரியவராத நிலையில், அவரைப் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் தம்மைத் தொடர்புகொள்ளுமாறு குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.







