க்ரிஷ் நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் ஜானகி சிறிவர்தன எதிர்வரும் ஒக்டோபர் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகளின் கீழ் இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவினரால் நேற்று (24) கைது செய்யப்பட்ட அவர், கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இந்த விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு கோட்டை பகுதியில் அமைந்துள்ள ‘டிரான்ஸ்வொர்க் சதுக்கம்’ காணியை க்ரிஷ் நிறுவனத்துக்காக பெற்றுக்கொள்வதற்கு உதவியதாகக் கூறப்படும் வகையில், பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு 70 மில்லியன் ரூபா இலஞ்சமாக வழங்கியதாக ஜானகி சிறிவர்தன மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
குறித்த தொகை மூன்று சந்தர்ப்பங்களில் வழங்கப்பட்டதாக விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தக் குற்றச்சாட்டு தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிடமும் விசாரணை நடத்தப்பட்டு, அவரது வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும், குறித்த பணப் பரிமாற்றங்கள் மற்றும் இலஞ்சக் குற்றச்சாட்டுகள் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.








