அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரதி பணிப்பாளர் எம்.ஏ.சி.எம். றியாஸ் அவர்களின் நேரடி கண்காணிப்பின் கீழ் முன்னெடுக்கப்படும் அம்பாறை மாவட்ட உயிர்காக்கும் மற்றும் அவசரகால மீட்புக் குழுவின் இரண்டாம் கட்ட பயிற்சித் திட்டத்தின் கீழ், பயிலுநர்களுக்கான நான்காவது நாள் நீச்சல் மற்றும் மீட்புப் பயிற்சி நேற்று (27) சனிக்கிழமை சம்மாந்துறை ஜனாதிபதி விளையாட்டு வளாகத்தில் அமைந்துள்ள நீச்சல் தடாகத்தில் நடைபெற்றது.
அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தெரிவுசெய்யப்பட்ட பயிலுநர்கள் இப்பயிற்சியில் கலந்துகொண்டனர்.
ஏற்கனவே அம்பாறை மாவட்ட உயிர்காக்கும் மற்றும் அவசரகால மீட்புக் குழுவில் பயிற்சி பெற்ற எஸ்.என். தில்சாத் பர்வீஸ், எஸ்.ஐ.எம். பிறோஸ், ஏ.ஆர்.எம். மஜீட், எம்.டி. பைசல் முகம்மட், எம்.எம். சதாத் மற்றும் என்.டி.எம். ஜெமீன் ஆகியோரினால் பயிலுநர்களுக்கு நீச்சல் மற்றும் நீர்மீட்பு தொடர்பான நடைமுறைப் பயிற்சிகள் வழங்கப்பட்டன.
இதன்போது, நீரில் பாதுகாப்பாகச் செயற்படுதல், நீரில் மிதத்தல், சுவாசக் கட்டுப்பாடு, அடிப்படை நீச்சல் நுட்பங்கள் மற்றும் அவசரநிலைகளில் மேற்கொள்ள வேண்டிய உயிர்காக்கும் நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் பயிற்சிகள் வழங்கப்பட்டன.





அம்பாறை மாவட்டத்தில் கடல், ஆறுகள், குளங்கள் மற்றும் நீர்த்தேக்கங்கள் உள்ளிட்ட பல்வேறு நீர்நிலைகள் காணப்படுகின்ற நிலையில், நீர்விபத்துக்களைத் தடுப்பதற்கும், அவசரநிலைகளில் திறம்படச் செயற்படக்கூடிய பயிற்சி பெற்ற உயிர்காக்கும் குழுவினரை உருவாக்குவதற்கும் இத்தகைய பயிற்சிகள் முக்கியத்துவம் பெறுகின்றன.
அத்துடன், நீரில் சிக்கியவர்களை மீட்கும் நடவடிக்கைகளின்போது மீட்புப் பணியாளர்களின் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்பட வேண்டியதன் அவசியம் குறித்தும் பயிற்சியின்போது வலியுறுத்தப்பட்டது.
அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் மேற்பார்வையில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் இப்பயிற்சித் திட்டம், மாவட்டத்தில் நீர்சார் அனர்த்தங்களுக்கான முன்தயார்நிலை மற்றும் அவசரகால மீட்பு திறன்களை மேலும் வலுப்படுத்தும் நடவடிக்கையாக அமைந்துள்ளது.







