சந்தையில் விற்பனை செய்யப்படும் சிமெந்து மூட்டையின் விலை எவ்விதத்திலும் அதிகரிக்கப்படவில்லை என்றும், சிமெந்து விலை உயர்த்தப்பட்டுள்ளதாக வெளியாகும் தகவல்கள் முற்றிலும் பொய்யானவை என்றும் வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
சிமெந்து விலை தொடர்பாக ஊடகங்களுக்கு விசேட கருத்துத் தெரிவித்த அவர், ஒரு சிமெந்து மூட்டையின் அதிகபட்ச சில்லறை விலை 2,400 ரூபாய் எனக் குறிப்பிடப்பட்டிருந்தாலும், எந்தவொரு கடையிலும் அந்த அதிகபட்ச விலைக்கு சிமெந்து விற்பனை செய்யப்படுவதில்லை எனக் குறிப்பிட்டார்.
நிறுவனங்கள் வழங்கும் பல்வேறு விலைக் கழிவுகள் காரணமாக, சந்தையில் ஒரு சிமெந்து மூட்டை 1,700 ரூபாய் முதல் 1,850, 1,900, 2,000 மற்றும் 2,100 ரூபாய் வரையிலான விலைகளில் வழமைபோன்று விற்பனை செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
சிமெந்து உற்பத்தி நிறுவனங்கள் தமது விற்பனை முகவர்களுக்கு வழங்கும் விற்பனைத் தரகு தொகையில் ஏதேனும் குறைப்பு செய்யப்பட்டிருந்தால், அது தொடர்புடைய முகவர்களுக்கும் நிறுவனங்களுக்கும் இடையில் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்பட வேண்டிய உள்விவகாரமாகும். அதனை நுகர்வோர் மீது சுமத்த முடியாது என்றும் அமைச்சர் விளக்கமளித்தார்.
அரசாங்கமோ அல்லது சம்பந்தப்பட்ட நிறுவனங்களோ சிமெந்து விலையை அதிகரிப்பது தொடர்பாக எந்தவொரு பேச்சுவார்த்தையையும் நடத்தவில்லை என்றும், விலையில் எவ்வித திருத்தமும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
மக்களைத் தவறாக வழிநடத்தும் வகையில் சில குழுக்கள் அடிப்படையற்ற பொய்யான தகவல்களைப் பரப்ப முயற்சிப்பதாகவும் அமைச்சர் குற்றம்சாட்டினார்.







