அதிவேக நெடுஞ்சாலைகளில் இருக்கைப் பட்டி அணியும் சட்டங்களை மீறிய குற்றத்திற்காக 2,000க்கும் மேற்பட்ட நபர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த 19ஆம் திகதி முதல் இன்று வரையிலான காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனைகளின் போதே இந்த அபராதங்கள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்தச் சோதனைகளின் போது, வாகனங்களில் இருக்கைப் பட்டிகள் பொருத்தப்பட்டிருந்த போதிலும், அவற்றை அணியாமல் பயணித்த 1,000க்கும் மேற்பட்ட பயணிகளுக்கும் அபராதம் விதிக்கப்பட்டதாக காவல்துறையினர் மேலும் குறிப்பிட்டனர்.
இது குறித்து அதிவேக நெடுஞ்சாலை போக்குவரத்து பாதுகாப்புப் பிரிவினர் தெரிவிக்கையில், அதிவேக நெடுஞ்சாலை நுழைவு மற்றும் வெளியேறும் வாயில்களில் அனைத்து வாகனங்களும் தொடர்ச்சியாகச் சோதனையிடப்பட்டு வருவதாகத் தெரிவித்தனர்.
தற்போது நடைபெற்று வரும் இந்த கண்காணிப்பு நடவடிக்கைகளின் போது, பயணிகள் போக்குவரத்து பேருந்துகள் மீது சிறப்பு கவனம் செலுத்தப்படும் என்றும் காவல்துறையினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.








