நுவரெலியா, மாகஸ்தோட்ட பகுதியில் உள்ள சுற்றுலா விடுதியொன்றில் 27 வயதுடைய பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரை 48 மணிநேரம் பொலிஸ் தடுப்புக்காவலில் வைத்து விசாரணை நடத்த நுவரெலியா நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
கடந்த 10ஆம் திகதி இடம்பெற்ற குறித்த கொலைச் சம்பவத்துடன் தொடர்புடையவர் எனச் சந்தேகிக்கப்படும் 27 வயதுடைய நபர், உயிரிழந்த பெண்ணின் காதலன் எனவும், அவர் தெரிபஹா பகுதியைச் சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
கொலைச் சம்பவத்தின் பின்னர் தெரிபஹா பொலிஸ் நிலையத்தில் தானாகச் சரணடைந்திருந்த சந்தேகநபர், பொலிஸ் காவலில் இருந்தபோது கைவிலங்குடன் தப்பிச் சென்றுள்ளார்.
இதனையடுத்து, அவரைக் கைது செய்வதற்காகப் பொலிஸார் தீவிர தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.
இந்நிலையில், கடந்த 12ஆம் திகதி இரவு சுமார் 11.30 மணியளவில் நுவரெலியா பிரதான பேருந்து நிலையத்திற்கு அருகில் கைவிலங்குடன் மதுபோதையில் சுற்றித்திரிந்த நிலையில் சந்தேகநபர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது, அவர் மறைத்து வைத்திருந்ததாகக் கூறப்படும் நஞ்சுப் போத்தல் ஒன்றையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
ஆரம்பகட்ட விசாரணைகளின் பின்னர், நேற்று (13) நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் சந்தேகநபர் ஆஜர்படுத்தப்பட்டார்.
இதன்போது, மேலதிக விசாரணைகளை முன்னெடுப்பதற்காக சந்தேகநபரை 48 மணிநேரம் பொலிஸ் தடுப்புக்காவலில் வைக்க அனுமதி கோரி பொலிஸார் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தனர்.
இதனையடுத்து, சந்தேகநபரை 48 மணிநேரம் பொலிஸ் தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்ய அனுமதி வழங்கிய நீதிமன்றம், எதிர்வரும் 15ஆம் திகதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறும் உத்தரவிட்டுள்ளது.







