நாட்டின் பல பகுதிகளிலும் சட்டவிரோதமாக மருத்துவச் சிகிச்சை வழங்கும் போலி வைத்தியர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்து வருவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதன் காரணமாக கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளர்கள் உயிரிழக்கும் அபாயம் காணப்படுவதுடன், பொருத்தமற்ற மருந்துகளை உட்கொள்வதால் அங்கவீனமடையும் அபாயமும் அதிகரித்துள்ளதாக அந்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் வைத்தியர் பிரசாத் கொலம்பகே இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
போலி வைத்தியர்கள் தொடர்பான தகவல்கள் தமது சங்கத்தினால் அரசாங்கத்துக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், இதுவரையில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை எனவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இவ்வாறான போலி வைத்தியர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது எதிர்காலத்தில் சுகாதாரத்துறைக்கு மாத்திரமன்றி, ஒட்டுமொத்த சமூகத்திற்கும் பாரிய பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என வைத்தியர் தெரிவித்துள்ளார்.
எனவே, பொறுப்பு வாய்ந்த தரப்பினர் இனியும் தாமதிக்காமல் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அதேவேளை, பொதுமக்களும் இந்த விடயத்தில் மிகுந்த விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
குறிப்பாக, ஏதேனும் நோய் அல்லது நோய் அறிகுறிகள் ஏற்பட்டால், வைத்தியரின் ஆலோசனையின்றி நேரடியாக மருந்தகங்களுக்குச் சென்று மருந்துகளை பெற்றுக்கொள்வதை முற்றாகத் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.
தனியார் மருந்தகங்களில் சிகிச்சை பெறச் செல்லும் போது, சிகிச்சை வழங்குபவர் இலங்கை மருத்துவ சபையில் பதிவு செய்யப்பட்ட வைத்தியரா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.







