2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் தொழில்சார் கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டதாகக் குற்றஞ்சாட்டி, நாட்டின் பல்வேறு அரச சேவைகளின் தொழிற்சங்கங்கள் இன்று (16) முதல் பணிப்புறக்கணிப்பு மற்றும் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளன.
இதற்கமைய, நீர்ப்பாசனத் திணைக்களத்தின் 450க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப உதவியாளர்கள் எரிபொருள் மற்றும் களப் பணிகளுக்கான செலவுகளுக்கு நிவாரணம் வழங்கப்படாமையைக் கண்டித்து, நேற்று நள்ளிரவு முதல் இரண்டு நாள் சுகவீன விடுமுறைப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
அதேவேளை, அனர்த்த நிவாரண சேவைகள் தொழிற்சங்கத்தினரும் இன்று காலை முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். தங்களது நான்கு பிரதான கோரிக்கைகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை என அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இதற்கிடையில், களப் பணிகளுக்கான கொடுப்பனவை மீள வழங்கக் கோரி அரச சேவைப் பொறியியலாளர் சங்கம் இன்று பொல்துவ பகுதியில் பாராளுமன்ற நுழைவாயிலுக்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளது.
இது சம்பள உயர்வுக்கான போராட்டமல்ல என்றும், களப் பணிகளுக்காக அதிகாரிகள் ஏற்கும் மேலதிக செலவுகளை ஈடுகட்டுவதற்கான கொடுப்பனவை வழங்குமாறே கோருவதாகவும் சங்கம் தெரிவித்துள்ளது.








