எதிர்வரும் மூன்று ஆண்டுகளுக்குள் சுமார் 7,000 மருத்துவர்களை சுகாதார சேவையில் புதிதாக இணைத்துக்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அரச வைத்தியசாலைகளில் நிலவும் மருத்துவப் பணியாளர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் நோக்கில், வெற்றிடங்கள், ஓய்வுபெற்ற மருத்துவர்கள் மற்றும் உயிரிழந்த அதிகாரிகளின் எண்ணிக்கை உள்ளிட்ட விடயங்களை அடிப்படையாகக் கொண்டு புதிய ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2017ஆம் ஆண்டுக்குப் பின்னர் சுகாதாரத்துறையின் பணியாளர் கட்டமைப்பில் எவ்வித திருத்தங்களும் மேற்கொள்ளப்படாததால், புதிய மருத்துவர்களை ஆட்சேர்ப்பு செய்வதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்குத் தீர்வாக, சுகாதார அமைச்சினால் விஞ்ஞானபூர்வமான பணியாளர் கட்டமைப்பு ஆய்வு முன்னெடுக்கப்பட்டு, அதற்கான தகவல்கள் நிதி அமைச்சின் முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்திற்கு ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
இதன்படி, 2027, 2028 மற்றும் 2029ஆம் ஆண்டுகளுக்கான சுகாதாரத்துறை ஊழியர் அனுமதிகளை எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்குள் பெற்றுக்கொள்ள முடியும் என எதிர்பார்ப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும், நாட்டின் 25 மாவட்டங்களில் 11 மாவட்டங்களில் அமைந்துள்ள மருத்துவ பீடங்களில் சுமார் 12,000 மாணவர்கள் தற்போது மருத்துவக் கல்வியைத் தொடர்ந்து வருகின்றனர். நாட்டில் தற்போது சுமார் 25,000 மருத்துவர்கள், விசேட மருத்துவர்கள் மற்றும் நிர்வாக மருத்துவர்கள் சேவையில் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மருத்துவப் பட்டப்படிப்பை நிறைவு செய்து உள்ளகப் பயிற்சியைப் பூர்த்தி செய்யும் பெரும்பாலான பட்டதாரிகளை அரச சுகாதார சேவையில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
புதிய பணியாளர் கட்டமைப்பு நடைமுறைக்கு வருவதன் மூலம், பயிற்சியை நிறைவு செய்த மருத்துவர்களுக்கு முதல் நியமனங்களை வழங்குவதில் நிலவி வந்த தாமதங்களுக்கும் தீர்வு காண முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.







