போரினால் பாதிக்கப்பட்ட வடக்கின், பலாலியில் அமைந்துள்ள தமது பூர்வீக வாழ்விடத்திலிருந்து வெளியேற்றப்பட்டு, இராணுவத்தினரால் பலவந்தமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமது சொந்த நிலம் விடுவிக்கப்பட்ட பின்னர், அங்கேயே தனது இறுதி மூச்சை விடவேண்டும் என 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஏங்கி காத்திருந்த வயோதிப தமிழ் தாய் ஒருவரின் ஆசை நிறைவேறாமலேயே அவரின் உயிர் பிரிந்துள்ளது.
உலகெங்கிலும் உள்ள இந்து மக்கள் தீபாவளிப் பண்டிகையை கொண்டாடிய நவம்பர் 8ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை, காணிகளை இழந்த மக்கள் தமது வார இறுதி போராட்டத்தின்போது, 36 ஆண்டுகளாக காத்திருந்த எதிர்பார்ப்புகள் நிறைவேறாமலேயே உயிரிழந்த 83 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தாயான தம்பிதுரை இளையகுட்டியின் பூதவுடலை, அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் போராட்டக் களத்திற்கு எடுத்துவந்திருந்தனர்.
இராணுவத்தினரால் பலவந்தமாகக் கைப்பற்றப்பட்டுள்ள தமிழ் மக்களுக்குச் சொந்தமான யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்குப் பகுதியில் உள்ள காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி, காணிகளை இழந்த மக்கள் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் முன்னெடுத்து வரும் போராட்டம் 2026 ஜூன் 21ஆம் திகதி ஆரம்பமானது.
தனது வாழ்நாளின் இறுதிக் காலத்தைத் தனது பூர்வீக நிலத்திலேயே கழிக்க வேண்டும் என்பதும், தனது இறுதிச் சடங்குகள் அதே வீட்டில் நடைபெற வேண்டும் என்பதும், இளையகுட்டி தாயாரின் பெரும் விருப்பமாக இருந்ததாக பிராந்திய ஊடகவியலாளர்கள் தெரிவித்தனர் .
தமது பூர்வீக காணிகளையும் வீடுகளையும் இழந்துள்ள நிலையில், மகிழ்ச்சியுடன் தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாட முடியாது என தெரிவித்து போராட்டத்தில் கலந்துகொண்ட வடபகுதி தமிழ் மக்கள், இம்முறை தீபாவளியை ‘கறுப்பு தீபாவளி’ எனப் பெயரிட்டிருந்தனர்.
“எங்களுடைய சொந்த காணிகளில் மீண்டும் குடியேறிய பின்னரே, எமது சொந்த வீடுகளில் எமக்கு மகிழ்ச்சியுடன் தீபாவளிப் பண்டிகையை கொண்டாட முடியும்” என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தியிருந்தனர்.
யுத்தம் நிறைவடைந்த பின்னர், வடக்கில் ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகளைக் கையகப்படுத்தி, மகிந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் இதுவரை இரத்து செய்யப்படாதமையினால், காணிகளை இழந்த பிரதேச தமிழ் மக்கள் தமது பூர்வீக நிலங்களை மீளக் கையளிக்குமாறு வலியுறுத்தி ஆரம்பித்த போராட்டம் தற்போது ஆறு மாதங்களைக் கடந்துள்ளது.

தமிழ் மக்களுக்குச் சொந்தமான சுமார் 6,000 ஏக்கர் தனியார் காணிகளைக் கையகப்படுத்தி, 2013ஆம் ஆண்டு மகிந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் அரசாங்கம் வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டிருந்த நிலையில் நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில், அந்தக் காணிகளில் சுமார் 3,000 ஏக்கர் நிலப்பரப்பில் அன்றாட வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்ல காணி உரிமையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தாலும் குறித்த வர்த்தமானி அறிவித்தல் இதுவரை இரத்து செய்யப்படாததால், தமது காணிகளுக்கான சட்டப்பூர்வ உரிமையை உறுதிப்படுத்த முடியாமல் அந்த பகுதி மக்கள் பெரும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளனர்.
அரச பாதுகாப்புப் படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களில் இராணுவத்தினரால் விவசாய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், அதன் மூலம் கிடைக்கும் அறுவடைகளை அந்த காணிகளின் உரிமையாளர்களே பணம் கொடுத்து வாங்க வேண்டிய அவல நிலைமை காணப்படுவதாக வடக்கின் தமிழ் மக்கள் பிரதிநிதிகள் இதற்கு முன்னர் சுட்டிக்காட்டியிருந்தனர்.
இராணுவத்தினரால் பலவந்தமாக கையகப்படுத்தப்பட்டுள்ள தமிழ் மக்களுக்கு சொந்தமான யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்குப் பகுதியிலுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி, ‘கமாண்டர் பங்களா’ என அழைக்கப்படும் வட மாகாண இராணுவ கட்டளை தளபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு முன்னால், 2026 ஏப்ரல் 24ஆம் திகதி முதல் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும், அதேவேளை 2026 ஜூன் 21ஆம் திகதி முதல் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் பலாலி சந்தியிலும் காணிகளை இழந்த மக்கள் வாராந்தப் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
அந்த கோரிக்கைகளுக்காக அரசாங்கம் இதுவரை எந்தவொரு தீர்வையும் வழங்கியதாகத் தெரியவில்லை.







