யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளரும் பேராசிரியருமான நாகமுத்து பிரதீபராஜா, நாட்டின் பல பகுதிகளில் நிலவும் வானிலை தொடர்பில் இன்று (01) அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.
அதன்படி, தற்போது வடக்கு, கிழக்கு, தெற்கு மற்றும் மத்திய மாகாணங்களின் பல பகுதிகளிலும் பெய்து வரும் வெப்பச் சலன மழை, மேலும் பல பகுதிகளுக்கு பரவுவதுடன் எதிர்வரும் ஒக்டோபர் 5ஆம் திகதி வரை தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
குறிப்பாக இன்று பிற்பகலுக்குப் பின்னர் யாழ்ப்பாண மாவட்டத்தின் பல பகுதிகளிலும் வெப்பச் சலன மழை பெய்யக்கூடிய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மழை இடிமின்னலுடன் கூடியதாக காணப்படலாம் என்பதால், இடிமின்னல் தொடர்பில் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, வடகிழக்கு பருவமழைக்கு சாதகமான கீழைக்காற்றுக்கள் நாளை (02) முதல் வீச ஆரம்பிக்கும் என பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
முன்னர் எதிர்பார்க்கப்பட்டதன்படி, எதிர்வரும் ஒக்டோபர் 9ஆம் திகதி முதல் கீழைக்காற்றுக்கள் இலங்கையின் கிழக்கு கரையோரப் பகுதிகளில் வீசத் தொடங்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வடகிழக்கு பருவக்காற்றின் உடைவு ஒக்டோபர் 12ஆம் திகதி இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
எனினும், இலங்கையின் நிலப்பரப்பில் இந்த ஆண்டுக்கான வடகிழக்கு பருவக்காற்று வீசத் தொடங்குவது ஒக்டோபர் 14ஆம் திகதி முதல் 18ஆம் திகதிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் இடம்பெறக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வங்காள விரிகுடாவில் எதிர்வரும் ஒக்டோபர் 14ஆம் திகதி புதிய காற்றழுத்த தாழ்வு நிலை ஒன்று உருவாகுவதற்கான வாய்ப்புள்ளதாக பேராசிரியர் பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
இது இவ்வாண்டின் வடகிழக்கு பருவத்தின் முதலாவது காற்றழுத்த தாழ்வு நிலையாக அமையக்கூடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய நிலையில் தாழ்வு நிலையாக காணப்பட்டாலும், அது அடுத்த கட்டங்களுக்கு விருத்தியடைவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய நிலவரப்படி (01) குறித்த தாழ்வு நிலை வடக்கு மற்றும் வடமேற்கு திசையை நோக்கி நகரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
எனினும், அதன் நகர்வு வேகம், நகரும் திசை மற்றும் தீவிரத்தன்மை தொடர்பில் எதிர்வரும் ஒக்டோபர் 10ஆம் திகதியளவிலேயே உறுதியான மதிப்பீட்டை மேற்கொள்ள முடியும் எனவும் பேராசிரியர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எவ்வாறாயினும், இந்த காற்றழுத்த தாழ்வு நிலையின் தாக்கத்தால் எதிர்வரும் ஒக்டோபர் 14ஆம் திகதி முதல் இலங்கையின் வடக்கு, கிழக்கு, மத்திய, மேற்கு, தெற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களின் பல பகுதிகளிலும் கனமழை பெய்யக்கூடிய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.







