உலக சந்தையில் எரிபொருள் விலைகள் அதிகரித்துள்ள போதிலும், அதன் முழுமையான சுமையை நுகர்வோர் மீது அரசாங்கமும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனமும் சுமத்தவில்லை என கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.எஸ். ராஜகருண தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (02) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.
சர்வதேச சந்தையில் டீசல் மற்றும் பெட்ரோல் விலைகள் அதிகரித்துள்ளதுடன், இலங்கை கொள்முதல் செய்யும் மசகு எண்ணெயின் விலை பீப்பாய் ஒன்றுக்கு 69 அமெரிக்க டொலரிலிருந்து 115 டொலர் வரை உயர்ந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
தற்போதைய சர்வதேச விலைகளின் அடிப்படையில் டீசல் லீற்றர் ஒன்றின் செலவு சுமார் 528 ரூபாவாக காணப்பட்டாலும், அது உள்நாட்டில் 392 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் தெரிவித்தார்.
இதற்கமைய, டீசல் லீற்றர் ஒன்றுக்கான 70 ரூபா செலவை அரசாங்கமும், மேலும் 66 ரூபாவை பெற்றோலியக் கூட்டுத்தாபனமும் ஏற்றுக்கொள்வதாக அவர் கூறினார்.
மேலும், உலக சந்தையில் எரிபொருள் விலைகள் எதிர்காலத்தில் குறைவடைந்தால், அதன் பயனை நுகர்வோருக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் தெரிவித்தார்.








