மட்டக்களப்பு, மயிலத்தமடு மற்றும் மாதவனை பகுதிகளைச் சேர்ந்த கால்நடைப் பண்ணையாளர்கள் தங்களுக்கு ஏற்படும் அச்சுறுத்தல்கள் மற்றும் வாழ்வாதாரப் பிரச்சனைகள் குறித்து மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் சிரேஸ்ட அத்தியட்சகரிடம் நேரில் சென்று முறைப்பாடு செய்துள்ளனர்.
மயிலத்தமடு பகுதியில் சட்டவிரோதமாகப் பயிர்ச்செய்கையில் ஈடுபடுபவர்கள் மற்றும் பொலிஸ் பிரிவினர் அங்கு வந்து பண்ணையாளர்களை அச்சுறுத்துவதோடு, அவர்களின் வாடிகளைப் பிரித்துச் செல்லுமாறு வற்புறுத்துவதாகப் பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.
மேலும், அப்பகுதியில் உள்ள காடுகள் அழிக்கப்படுவதால் கால்நடைகளுக்கான மேய்ச்சல் நிலங்கள் பாதிக்கப்படுவதாகவும், யானை போன்ற வனவிலங்குகளின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் தங்களின் மாடுகள் சுடப்பட்டு கொல்லப்படும் சம்பவங்களுக்கு உரிய நீதி கிடைக்கவில்லை என்றும் அவர்கள் குற்றஞ்சாட்டினர்.


பண்ணையாளர்களுடன் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது, மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர், மகாவலி மற்றும் வனப்பரிபாலனத் துறை அதிகாரிகளுடன் இணைந்து நாளை நேரில் வந்து கள நிலவரத்தை ஆராய்ந்து உரிய தீர்வு பெற்றுத் தருவதாக உறுதியளித்துள்ளார்.
எனினும், தங்களுக்கு நிரந்தரமான தீர்வு கிடைக்கும் வரை இதனைத் தற்காலிக ஆறுதலாக மட்டுமே ஏற்றுக்கொள்வதாகவும், பண்ணையாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் நிரந்தரத் தீர்விற்காகக் காத்திருப்பதாகவும் மயிலத்தமடு கால்நடை வளர்ப்பு பண்ணையாளர் சங்கத் தலைவர் சின்னத்தம்பி நிமலன் மற்றும் பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.
மயிலத்தமடு பகுதியில் சட்டவிரோதமாகப் பயிர்ச்செய்கையில் ஈடுபடுபவர்கள் மற்றும் பொலிஸ் பிரிவினர் தங்களை அச்சுறுத்துவதாகவும், அமைக்கப்பட்டிருக்கும் வாடிகளை உடனடியாகப் பிரித்துச் செல்லுமாறு வற்புறுத்துவதாகவும் பண்ணையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
அப்பகுதியில் தொடர்ச்சியாக நடைபெறும் காடழிப்பு காரணமாகக் கால்நடைகளுக்கான மேய்ச்சல் நிலங்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், வனவிலங்குகளின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் தங்களின் மாடுகள் சுடப்பட்டுக் கொல்லப்படும் சம்பவங்களுக்கு உரிய நீதி கிடைக்கவில்லை என்றும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.







