இலங்கைப் பல்கலைக்கழகங்களின் சர்வதேச தரவரிசையை மேம்படுத்துவதுடன், உயர்கல்வியை சர்வதேசமயமாக்கும் நோக்கில் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுடன் கல்விசார் ஒத்துழைப்புகளை ஏற்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதற்கமைய, இலங்கைக்கும் வெளிநாடுகளுக்கும் இடையிலான உயர்கல்வி மற்றும் ஆய்வுத்துறை ஒத்துழைப்புகளை வலுப்படுத்தும் வகையில், பல்கலைக்கழகங்களுக்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை (MoU) மேற்கொள்வதற்கான யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராகப் பொறுப்பு வகிக்கும் பிரதமரினால் சமர்ப்பிக்கப்பட்ட குறித்த யோசனைக்கு இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி, கொழும்புப் பல்கலைக்கழகத்துக்கும் இந்தியாவின் மணிப்பால் உயர்கல்வி அகடமிக்கும் இடையில் கல்விசார் ஒத்துழைப்பு, வெளியீடுகள் மற்றும் கல்வித் தகவல் பரிமாற்றம், விரிவுரையாளர்கள், ஆய்வாளர்கள் மற்றும் மாணவர்களின் பரிமாற்றம், தொழில்நுட்ப உதவிகளைப் பெற்றுக்கொள்ளுதல் உள்ளிட்ட விடயங்களை உள்ளடக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்படவுள்ளது.
அத்துடன், இலங்கை பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழகத்துக்கும் தாய்லாந்தின் மஹாமகுட் பௌத்த பல்கலைக்கழகத்துக்கும் இடையில் கல்வி மற்றும் ஆராய்ச்சித் துறை ஒத்துழைப்புகளை மேம்படுத்தும் ஒப்பந்தமும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
மேலும், மொரட்டுவைப் பல்கலைக்கழகம், சீனாவின் சியான் ஜியாடோங்-லிவர்பூல் பல்கலைக்கழகம் மற்றும் ஸ்பெயினின் பார்சிலோனா லா சால் பல்கலைக்கழகம் ஆகியவற்றுக்கு இடையில் கூட்டு ஆராய்ச்சிகளை முன்னெடுப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும் மேற்கொள்ளப்படவுள்ளது.
பேராதனைப் பல்கலைக்கழகத்துக்கும் அவுஸ்திரேலியாவின் ரோயல் மெல்பேர்ன் தொழில்நுட்ப நிறுவனத்துக்கும் (RMIT) இடையில் கூட்டு ஆராய்ச்சிப் பயிற்சித் திட்டங்கள், கூட்டு வெளியீடுகள் உள்ளிட்ட கல்விசார் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான ஒப்பந்தமும் ஏற்படுத்தப்படவுள்ளது.
இதற்கு மேலதிகமாக, கூட்டு ஆராய்ச்சிப் பயிற்சித் திட்டங்களை நடைமுறைப்படுத்தவும், முதுகலைப் பட்டங்களை வழங்கவும் வசதியாக, Umbrella Cotutelle ஒப்பந்தத்தின் கீழ் இருதரப்பு ஒப்பந்தங்களையும் ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
இந்த நடவடிக்கைகள் மூலம் இலங்கைப் பல்கலைக்கழகங்களின் சர்வதேச கல்விசார் தொடர்புகள், ஆராய்ச்சித் திறன் மற்றும் உலகளாவிய பல்கலைக்கழகத் தரவரிசையில் அவற்றின் நிலையை மேம்படுத்த முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.








