இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மகேந்திர சிங் தோனி (MS Dhoni), இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடரில் வீரராகப் பங்கேற்ற தனது நீண்டகாலப் பயணத்தை முடிவுக்குக் கொண்டுவந்துள்ளார்.
இதற்கமைய, எதிர்வரும் 2027ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் சென்னை சுப்பர் கிங்ஸ் (CSK) அணியின் ஆலோசகராக (Team Mentor) அவர் புதிய பொறுப்பை ஏற்கவுள்ளதாக அந்த அணி உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
ஐபிஎல் 2027 தொடருக்கான வீரர்கள் தக்கவைப்பு அறிவிப்பு வெளியாகும் நாளான இன்று (17) இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
2008ஆம் ஆண்டு முதல் சென்னை அணியுடன் பயணித்து வந்த தோனி, தனது தலைமையில் அந்த அணிக்கு ஐந்து ஐபிஎல் கிண்ணங்களை வென்று கொடுத்துள்ளார். இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான தலைவர்களில் ஒருவராக அவர் திகழ்கிறார்.
தோனியின் புதிய பொறுப்பு குறித்து சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் என். சீனிவாசன் தெரிவிக்கையில்,
“எம்.எஸ். தோனி இல்லாமல் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி இல்லை. கடந்த இரண்டு தசாப்தங்களாக வெற்றிகள், பின்னடைவுகள் என அனைத்தையும் கடந்து நாங்கள் ஒன்றாகப் பயணித்துள்ளோம்.

2008ஆம் ஆண்டில் தோனி சென்னை அணியில் இடம்பெற வேண்டும் என நான் வலியுறுத்தினேன். நான் எடுத்த முடிவுகளில் அதுவே மிகச் சிறந்த முடிவு என்பதை காலம் நிரூபித்துள்ளது.
தோனி எப்போதும் எங்களது அடையாளமாக இருப்பார். சென்னை அவருக்கு எப்போதும் சொந்த வீடாகவே இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் முகாமைத்துவப் பணிப்பாளர் கே.எஸ். விஸ்வநாதன் தெரிவிக்கையில்,
“ஒரு கிரிக்கெட் வீரராக தோனி சாதித்தவை ஒவ்வொரு ரசிகரின் நினைவிலும் ஆழமாகப் பதிந்துள்ளன. மஞ்சள் நிற ஜெர்சியில் அவர் களமிறங்குவதை நாம் இழக்க நேரிட்டாலும், தொடர்ந்து எமது வீரர்களுக்கு அவர் வழிகாட்டுவார் என்பதில் மகிழ்ச்சியடைகிறோம். இந்த உறவு மேலும் பல ஆண்டுகளுக்கு அணியை வலுப்படுத்தும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
2026ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் காயம் காரணமாக தோனி எந்தவொரு போட்டியிலும் விளையாடவில்லை. இந்நிலையில், 2027ஆம் ஆண்டு முதல் வீரராக அல்லாமல் ஆலோசகராக அணியுடன் இணைந்து தனது அனுபவத்தையும் தலைமைத்துவத் திறனையும் இளம் வீரர்களுடன் பகிர்ந்துகொள்ளவுள்ளார்.
தோனியின் இந்தப் புதிய பொறுப்பு மாற்றம் சென்னை சுப்பர் கிங்ஸ் ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.







