சம்மாந்துறையில் பழுதடைந்த வெங்காயத்தை விற்பனை செய்தமை மற்றும் மருத்துவச் சான்றிதழின்றி உணவுப் பொருட்களைக் கையாண்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட நபருக்கு நீதிமன்றம் 10,000 ரூபா அபராதம் விதித்துள்ளது.
கடந்த நவம்பர் 10ஆம் திகதி கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில், பொது சுகாதாரப் பிரிவினர் மேற்கொண்ட சோதனையின்போது 8 கிலோ 250 கிராம் பழுதடைந்த வெங்காயம் கைப்பற்றப்பட்டது.
இதனைத் தொடர்ந்து சந்தேகநபருக்கு எதிராக சம்மாந்துறை நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
குறித்த வழக்கு இன்று (19) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, பழுதடைந்த வெங்காயத்தை விற்பனை செய்தமைக்காக 5,000 ரூபாவும், மருத்துவச் சான்றிதழின்றி உணவைக் கையாண்டமைக்காக மேலும் 5,000 ரூபாவும் அபராதமாக விதிக்கப்பட்டது.
அத்துடன், முதலாவது குற்றச்சாட்டுடன் தொடர்புடைய ஆறு மாத சிறைத்தண்டனை ஐந்து வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களின் சுகாதாரத்தைப் பாதுகாக்கும் நோக்கில், உணவுப் பாதுகாப்பு விதிமுறைகளை மீறுவோருக்கு எதிராக தொடர்ந்தும் சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என சம்மாந்துறை சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகத்தின் பொது சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.









