மூன்று ஆண்டுகளுக்கு மேல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள், சிறைச்சாலைத் திணைக்களத்தினால் வழங்கப்படும் ஆடைகளையே அணிந்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட வேண்டும் என சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளரும் ஆணையாளருமான சேனாக்க பல்லத்தேன்ன தெரிவித்துள்ளார்.
கைதிகளின் ஆடை தொடர்பில் சமூக ஊடகங்களில் பல்வேறு கருத்துகள் வெளியாகி வரும் நிலையில், சிறைச்சாலை விதிமுறைகளை மேற்கோள்காட்டி அவர் இந்த விளக்கத்தை வழங்கியுள்ளார்.
அதன்படி, எளிமையான சிறைத்தண்டனை அனுபவிக்கும் பௌத்த பிக்குகள், சிறையில் இருக்கும் காலத்தில் தங்களது மத ரீதியான அங்கியை அணிய அனுமதிக்கப்படுகின்றனர். எனினும், கடுமையான சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தால், சிறைச்சாலை நிர்வாகத்தினால் வழங்கப்படும் ஆடைகளையே அணிய வேண்டும்.
மூன்று ஆண்டுகளுக்கும் குறைவான சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஒருவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படும்போது, தண்டனைக்கு முன்னர் அணிந்திருந்த சாதாரண ஆடைகளை அணிய சிறைச்சாலை அத்தியட்சகரால் அனுமதி வழங்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதுபோன்ற சந்தர்ப்பங்களில் பௌத்த பிக்குகளும் தங்களது மத அங்கியை அணிய அனுமதிக்கப்படலாம்.
எனினும், மூன்று ஆண்டுகளுக்கு மேல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டவர்கள், நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படும் போதும் சிறைச்சாலைத் திணைக்களம் வழங்கும் ஆடைகளையே அணிந்திருக்க வேண்டும் என சேனாக்க பல்லத்தேன்ன வலியுறுத்தியுள்ளார்.
மேலும், நாடளாவிய ரீதியில் உள்ள சிறைச்சாலைகளில் தற்போது 73-க்கும் மேற்பட்ட மதகுருமார்கள் சிறைத்தண்டனை அனுபவித்து வருவதாகவும், அவர்களும் சிறைச்சாலை நிர்வாகத்தினால் வழங்கப்படும் ஆடைகளையே அணிந்து தண்டனையை அனுபவித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.








