பன்னிபிட்டிய, தெபானம பகுதியில் அமைந்துள்ள பழைய இரும்பு கொள்வனவு செய்யும் வர்த்தக நிலையமொன்றில் இன்று (21) முற்பகல் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இன்று காலை சுமார் 9.05 மணியளவில் ஏற்பட்ட இந்தத் தீ விபத்தைத் தொடர்ந்து, தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் நான்கு தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
கோட்டை மாநகர சபைக்குச் சொந்தமான மூன்று தீயணைப்பு வாகனங்களும், கொழும்பு தீயணைப்புப் பிரிவுக்குச் சொந்தமான ஒரு வாகனமும் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதுடன், தீ பரவியதில் வர்த்தக நிலையத்திற்கும் அங்கிருந்த பொருட்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எனினும், இந்தச் சம்பவத்தில் எவருக்கும் உயிரிழப்பு ஏற்படவில்லை எனப் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இதேவேளை, தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மஹரகம பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.







