மன்னார் மாவட்டத்தில் இந்த மாத ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பல்வேறு திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்று வருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
மாதத்தின் ஆரம்பத்தில் ஒரே நாளில் நான்கு கடைகளில் திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்ற நிலையில், தற்போது மன்னார் நகரின் பல்வேறு பகுதிகளிலும் திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மூர் வீதி, உப்புக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஒரு வாரத்தில் மாத்திரம் 10க்கும் மேற்பட்ட வீடுகளில் திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
வீடுகளில் இருந்து கையடக்கத் தொலைபேசிகள், நகைகள் உள்ளிட்ட பெறுமதியான பொருட்களுடன் எரிவாயு சிலிண்டர்களும் திருடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அத்துடன், ஆலயங்களின் உண்டியல்களை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவங்களும் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சில சம்பவங்கள் பட்டப்பகலிலேயே இடம்பெற்று வருவதால், பொதுமக்கள் தங்களது வீடுகள் மற்றும் உடைமைகளின் பாதுகாப்பு தொடர்பில் அச்சமடைந்துள்ளனர்.
இந்நிலையில், தொடர்ச்சியாக இடம்பெறும் திருட்டுச் சம்பவங்களை கட்டுப்படுத்த பொலிஸார் போதிய நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை என மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
திருட்டுச் சம்பவங்கள் தொடர்பில் முறைப்பாடு செய்யச் செல்லும் போது, சந்தேகநபர்கள் தொடர்பான தகவல்கள் மற்றும் உரிய ஆதாரங்களுடன் வருமாறு பொலிஸார் அறிவுறுத்துவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
மன்னாரில் அதிகரித்து வரும் திருட்டுச் சம்பவங்களை கட்டுப்படுத்தி, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய பொலிஸார் உடனடியாக தீவிர நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.







