வெற்று மஞ்சள் நிற எரிவாயு சிலிண்டர்களுக்கு நீல நிற வர்ணம் பூசி, அவற்றைப் போலி லிட்ரோ (Litro) எரிவாயு சிலிண்டர்களாக மாற்றி மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் தந்தை, மகன் உள்ளிட்ட மூவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கம்பஹா மாவட்டம், கொட்டதெனியாவ பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள், மினுவாங்கொடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதன்போது, சந்தேகநபர்களை எதிர்வரும் டிசம்பர் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
பொலிஸ் விசாரணைகளின்படி, மஞ்சள் நிற வெற்று எரிவாயு சிலிண்டர்களுக்கு நீல நிற வர்ணம் பூசி, அவற்றை ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட பழைய லிட்ரோ சிலிண்டர்களைப் போன்று காண்பிப்பதற்காக சந்தேகநபர்கள் நூதனமான முறையைக் கையாண்டுள்ளனர்.
குறிப்பாக, புதிதாக வர்ணம் பூசப்பட்ட சிலிண்டர்கள் பழையவை போன்று தோற்றமளிப்பதற்காக அவற்றின் மீது அப்பம் தயாரிக்கும் மாவு, மிளகாய்க் குழம்பு மற்றும் உணவுக் கழிவுகள் உள்ளிட்டவற்றைப் பூசியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த மோசடி தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.







