கொழும்பு – பனாகொட, மெத மண்டிய பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்ட npp நாடாளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியாரச்சி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
நேற்று (07) இரவு 9.30 மணி முதல் 10.00 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் பயணித்ததாகக் கூறப்படும் மோட்டார் வாகனம் மோதியதில் நபர் ஒருவர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் அத்துருகிரிய பொலிஸாரால் நாடாளுமன்ற உறுப்பினர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், பின்னர் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
சம்பவத்தை நேரில் பார்த்ததாகக் கூறப்படும் ஒருவர் தெரிவிக்கையில், திடீரென பலத்த சத்தம் கேட்டதாகவும், அங்கு சென்று பார்த்தபோது காரின் முன்னால் ஒருவர் விழுந்து கிடந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
பின்னர் காயமடைந்த நபரை மீட்டு, வீதியில் சென்ற வாகனத்தின் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, சம்பவம் இடம்பெற்ற இடத்தில் உள்ள வெல்டிங் பட்டறையில் பணிபுரியும் மற்றொருவரிடமும் பொலிஸார் தகவல்களைப் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை அத்துருகிரிய பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.








