பிரித்தானியாவின் லண்டன் மற்றும் அதனைச் சூழவுள்ள தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் கார் திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக, வீடுகளின் முற்றங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பெறுமதியான கார்கள் சில நொடிகளிலேயே திருடப்படுவதாகப் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், லண்டனின் ஹாரோ பகுதியில் உள்ள வீடொன்றின் முற்றத்தில் நிறுத்தப்பட்டிருந்த ‘ஹூண்டாய் ஐயோனிக் 5’ (Hyundai IONIQ 5) ரக கார் திருடப்பட்ட சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
குறித்த காட்சிகளில், இருவர் வீட்டின் முற்றத்திற்கு வந்து, அவர்களில் ஒருவர் சாரதி இருக்கை பக்கமாகச் சென்று காரின் கதவைத் திறந்து அதனை ஓட்டிச் செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளன.
கார் பூட்டப்பட்டிருந்ததாக அதன் உரிமையாளர் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார். இலத்திரனியல் சாவியைப் போன்று செயல்படும் கருவியைப் பயன்படுத்தி இந்தத் திருட்டு மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.
இதனால், லண்டனில் வசிக்கும் தமிழர்கள் உள்ளிட்ட வாகன உரிமையாளர்கள் தமது வாகனங்களின் பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.







