இலங்கைக்கு அருகிலுள்ள மன்னார் வளைகுடா மற்றும் குமரி கடல் பிராந்தியத்தில் காணப்படும் காற்றுச் சுழற்சி தற்போது சற்று வலுவடைந்துள்ளதாக சிரேஷ்ட வானிலை அதிகாரி க.சூரியகுமாரன் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அடுத்த சில நாட்களுக்கு இடையிடையே மழை பெய்யக்கூடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த காற்றுச் சுழற்சி மேற்கு நோக்கி நகர்ந்து மாலைதீவு மற்றும் லட்சத்தீவுக்கு இடைப்பட்ட கடல் பிராந்தியத்தை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேவேளை, எதிர்வரும் 14ஆம் திகதியளவில் வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் மேலும் ஒரு காற்றுச் சுழற்சி உருவாகி, தமிழ்நாடு ஊடாக அரபிக்கடல் பிராந்தியத்தை நோக்கி நகரும் சாத்தியம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் தாக்கத்தால் எதிர்வரும் 14, 15, 16 மற்றும் 17ஆம் திகதிகளில் கிழக்கு மாகாணங்களில் மழைவீழ்ச்சி இடையிடையே சற்று அதிகரிக்கக்கூடும்.
மேலும், வடக்கு மாகாணத்தின் சில பகுதிகளில் எதிர்வரும் 14ஆம் திகதி முதல் சில நாட்களுக்கு சற்று அதிகமான மழை தொடர்ச்சியாகப் பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை, எதிர்வரும் 18ஆம் திகதியளவில் மேலும் ஒரு வானிலை நிகழ்வு உருவாகுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக சிரேஷ்ட வானிலை அதிகாரி க.சூரியகுமாரன் தெரிவித்துள்ளார்.








