வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சுற்றுலாத்துறை வளர்ச்சியால் கிடைக்கும் வருவாய், வேலைவாய்ப்பு மற்றும் முதலீடுகளின் பயன்கள் அந்தந்தப் பிரதேச மக்களுக்கும் உள்ளூர் தொழில்முனைவோருக்கும் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (08) நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றிய அவர், சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை மட்டும் கொண்டு சுற்றுலாத்துறையின் வளர்ச்சியை மதிப்பிடாமல், அதன் மூலம் கிடைக்கும் வருவாய் எவ்வாறு பகிரப்படுகிறது என்பதையும் வெளிப்படையாக மதிப்பிட வேண்டும் எனக் குறிப்பிட்டார்.
2018 முதல் 2026 வரையிலான சுற்றுலாப் பயணிகளின் வருகை, சராசரி தங்கும் காலம், நாளாந்த செலவினம் மற்றும் சுற்றுலா வருவாய் தொடர்பான முழுமையான தரவுகளை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு அவர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தார்.
அத்துடன், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சுற்றுலா அபிவிருத்திக்காக மாவட்ட ரீதியாக ஒதுக்கப்பட்ட நிதி, செலவிடப்பட்ட தொகை, நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டங்கள் மற்றும் அவற்றை முன்னெடுத்த நிறுவனங்கள் தொடர்பான தகவல்களையும் வெளியிட வேண்டும் எனத் தெரிவித்தார்.
பெரும் முதலீட்டாளர்களுக்கு மாத்திரம் வாய்ப்புகளை வழங்காமல், உள்ளூர் சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோருக்கும் சுற்றுலாத்துறையில் வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் எனவும் சாணக்கியன் வலியுறுத்தினார்.
மேலும், புதிய சுற்றுலா மண்டலங்கள் மற்றும் ஹோட்டல் திட்டங்களுக்கு அரச காணிகளை ஒதுக்கும்போது, உள்ளூர் வேலைவாய்ப்பு மற்றும் உள்ளூர் கொள்முதல் உள்ளிட்ட சமூக நலன்களை உறுதி செய்யும் நிபந்தனைகள் விதிக்கப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளின் மொழி மற்றும் கலாசார தனித்துவத்துக்கும் மதிப்பளிக்கப்பட வேண்டும் எனக் கூறிய சாணக்கியன், சுற்றுலாப் பயணிகளை வரவேற்கும் போது “ஆயுபோவன்” என்பதுடன் “வணக்கம்” உள்ளிட்ட தமிழ் வாழ்த்துக்களையும் பயன்படுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
இதற்குப் பதிலளித்த சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத், குறித்த பகுதிகளில் “வணக்கம்”, “காலை வணக்கம்”, “மாலை வணக்கம்” போன்ற தமிழ் வாழ்த்துக்களைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்த முடியும் எனத் தெரிவித்தார்.
மட்டக்களப்பு உள்ளிட்ட வடக்கு, கிழக்கு பகுதிகளின் சுற்றுலா வளங்களை திட்டமிட்ட முறையில் பயன்படுத்தி, அதன் பொருளாதார நன்மைகள் உள்ளூர் மக்களையும் சென்றடையும் வகையில் அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் என சாணக்கியன் மேலும் கோரிக்கை விடுத்தார்.







