2027ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் ஊடாக அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படும் என்று பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஆசிரியர்களின் சம்பள முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கு அரச சேவை ஆணைக்குழுவின் ஊடாக உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (08) நடைபெற்ற ‘வாய்மொழி மூலமான வினாக்களுக்கான நேரம்’ அமர்வின்போது, பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சானக மதுகொட எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போதே அவர் இந்த விடயங்களைக் குறிப்பிட்டார்.
அங்கு உரையாற்றிய பிரதமர், ஆசிரியர் – அதிபர் சேவையில் மாத்திரமல்ல அரச சேவையில் சகல துறையிலும் காணப்படும் சம்பள பிரச்சினைக்கு 2025ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் ஊடாக சம்பளம் அதிபரிக்கப்பட்டுள்ளது.

சுபோதினி குழுவின் பரிந்துரைக்கு அப்பாற்பட்ட வகையில் கல்விச் சேவை உத்தியோகத்தர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர் – அதிபர் சேவையில் நிலவும் சம்பள முரண்பாட்டுக்கு தீர்வு காண்பதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக அரச சேவையாளர்களின் சம்பளம் அதிகரிக்கப்படும்” என்று தெரிவித்தார்.








