மஹிந்த ராஜபக்ஷ குடும்பத்தினருக்கு எதிராக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் மூலம் தமிழ் மக்களையும் புலம்பெயர் தமிழர்களையும் மகிழ்விக்க அரசாங்கம் முயற்சிப்பதாக யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (08) வியாழக்கிழமை இடம்பெற்ற ஊழல் எதிர்ப்பு திருத்தச் சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மஹிந்த ராஜபக்ஷ, அவரது மனைவி ஷிராந்தி, மகன் நாமல் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு புலம்பெயர் தமிழர்கள் விரும்புவதாகக் குறிப்பிட்ட அவர், இவ்வாறான நடவடிக்கைகள் அரசியல் நோக்கங்களைக் கொண்டவை எனவும் தெரிவித்தார்.
“மஹிந்தவின் மனைவி ஷிராந்தியை உள்ளே போட்டதற்காகத் தமிழ் மக்கள் மகிழ்ச்சியடைகின்றனர். ஆனால், நான் மகிழ்ச்சியடைய மாட்டேன். எமது புலம்பெயர் மக்களிடம் நீங்கள் பெற்ற பணத்துக்காக அவர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கின்றீர்கள். மஹிந்த குடும்பம் தொடர்பில் பிரபாகரனால் செய்ய முடியாததைத் தற்போது நீங்கள் செய்கின்றீர்கள்” என அவர் கூறினார்.
மேலும், மஹிந்த ராஜபக்ஷ, ஷிராந்தி, கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் நாமல் ராஜபக்ஷ ஆகியோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் புலம்பெயர் தமிழர்கள் வலியுறுத்துவதாகவும் அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.
அத்துடன், எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலை இலக்காகக் கொண்டு அரசாங்கம் இவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுக்கிறதா என்ற கேள்வியையும் எழுப்பிய அர்ச்சுனா எம்.பி., அரசாங்கம் அரசியல் எதிரிகளை இலக்குவைத்து நடவடிக்கை எடுப்பதாகக் குற்றஞ்சாட்டினார்.
“மாகாண சபைத் தேர்தலுக்கு முன்னர் அவர்களைச் சிறையில் அடைத்தால் உங்களுக்கு வாக்குகள் கிடைக்கும்” எனவும் அவர் தனது உரையின்போது தெரிவித்தார்.








