எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் வீதி விபத்துக்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நாடளாவிய ரீதியில் போக்குவரத்துச் சோதனைகள் மற்றும் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை அதிகரிக்க இலங்கை பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.
குறிப்பாக, மதுபோதையிலும் போதைப்பொருள் பயன்படுத்திய நிலையிலும் வாகனங்களைச் செலுத்தும் சாரதிகளைக் கண்டறிவதற்கு முன்னுரிமை வழங்கப்படவுள்ளதாக போக்குவரத்துக் கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்புக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் டபிள்யூ.பி.ஜே. சேனாதீர தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, மதுபோதையில் வாகனம் செலுத்துவோரைக் கண்டறிவதற்கான சோதனைகளுடன், போதைப்பொருள் பயன்படுத்திவிட்டு வாகனம் செலுத்தும் சாரதிகளைக் கண்டுபிடிக்கும் நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்படவுள்ளன.
மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை அடையாளம் காண்பதற்குத் தேவையான மூச்சுப் பரிசோதனைக் கருவிகள் ஏற்கனவே போதியளவில் பொலிஸ் நிலையங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, சாரதிகளுக்கு முன்கூட்டிய அறிவித்தல் இன்றி திடீர் போதைப்பொருள் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. மேலும், வீதி விபத்துக்களில் சிக்கிய சாரதிகளும் போதைப்பொருள் பயன்படுத்தியுள்ளனரா என்பதைக் கண்டறிவதற்கான பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படவுள்ளனர்.
எனவே, மதுபானம் அல்லது போதைப்பொருள் பயன்படுத்திய பின்னர் எக்காரணம் கொண்டும் வாகனங்களைச் செலுத்த வேண்டாம் என சாரதிகளிடம் பிரதிப் பொலிஸ் மா அதிபர் கேட்டுக்கொண்டுள்ளார்.
பண்டிகைக் காலத்தில் அதிகரிக்கக்கூடிய வீதி விபத்துக்களைத் தடுக்கும் வகையில் போக்குவரத்துச் சட்டங்கள் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.







