பிக்குமார்களைச் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கும் முறை மற்றும் நீதிமன்றங்களுக்கு உள்ளிட்ட வெளி இடங்களுக்கு அழைத்துச் செல்லும் நடைமுறைகள் தொடர்பான சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்ள விசேட குழுவொன்றை நியமிக்கவுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
குறித்த குழு இரண்டு வாரங்களுக்குள் ஆராய்ந்து, தேவையான சட்டத் திருத்தங்கள் மற்றும் புதிய நிலையான கட்டளைகள் தொடர்பான பரிந்துரைகளைச் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (08) மகா சங்கத்தினருடன் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
சட்டமா அதிபர் திணைக்களம், நீதி அமைச்சு, பொது நிர்வாக அமைச்சு, பௌத்த அலுவல்கள் அமைச்சு மற்றும் சிறைச்சாலைத் திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்ட தரப்பினரை உள்ளடக்கியதாக இக்குழு அமைக்கப்படவுள்ளது. பிக்குமார்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய நடைமுறைகள் தொடர்பில் மகா சங்கத்தினருடன் கலந்துரையாடி, பொருத்தமான மாற்றங்களை மேற்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வண. கலகொடஅத்தே ஞானசார தேரர் சிறைச்சாலையிலிருந்து நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டபோது காவி உடைக்குப் பதிலாக சாதாரண உடையில் முன்னிலைப்படுத்தப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட சர்ச்சைகள் தொடர்பில் ஆராய்வதற்காகவே இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.
இதன்போது கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, தற்போதைய சிறைச்சாலைச் சட்டங்கள் மற்றும் விதிமுறைகளுக்கு அமைவாகவே அதிகாரிகள் செயற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். எனவே, நடைமுறையில் உள்ள சட்டங்களுக்கு அமையச் செயற்பட்ட அதிகாரிகளைக் குற்றம் சாட்டுவதில் பயனில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

1877ஆம் ஆண்டு இயற்றப்பட்ட சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டத்தின் அடிப்படையிலேயே நாட்டின் சிறைச்சாலைகள் நிர்வகிக்கப்பட்டு வருவதாகவும், காலத்திற்கேற்ப அவ்வப்போது சட்டத் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
மேலும், விளக்கமறியலில் உள்ள கைதிகளுக்கும் நீதிமன்றத்தால் குற்றவாளிகளாகத் தீர்ப்பளிக்கப்பட்ட தண்டனைக் கைதிகளுக்கும் இடையில் நடைமுறைகள் வேறுபடுவதாகவும், குறிப்பாகக் கடூழியச் சிறைத்தண்டனை அனுபவிப்பவர்களுக்கான ஆடை விதிமுறைகள் மாறுபடுவதாகவும் அவர் விளக்கமளித்தார்.
சிறைச்சாலைகளுக்குள் தடுத்து வைக்கப்படும் முறை மட்டுமன்றி, நீதிமன்றங்களுக்கோ அல்லது வேறு தேவைகளுக்காகவோ வெளியே அழைத்துச் செல்லப்படும் சந்தர்ப்பங்களிலும் பிக்குமார்களின் மத அடையாளம் மற்றும் ஆடை தொடர்பான விடயங்கள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும் என ஜனாதிபதி குறிப்பிட்டார்.
சட்டங்கள் காலத்திற்கேற்ப மாற்றியமைக்கப்பட வேண்டியவை எனத் தெரிவித்த அவர், தனிப்பட்ட விருப்பத்தின் அடிப்படையில் உத்தரவுகளைப் பிறப்பிப்பதற்குப் பதிலாக, உரிய சட்ட நடைமுறைகளின் ஊடாகவே மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
அத்துடன், குறிப்பிட்ட ஒரு தேரரை இலக்காகக் கொண்டு புதிய விதிமுறைகளை உருவாக்காமல், ஒட்டுமொத்த சிறைச்சாலை முறைமைக்கும் பொருந்தக்கூடிய வகையில் திருத்தங்கள் அமைய வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்ட மகா சங்கத்தினர், இவ்விடயம் தொடர்பில் கவனம் செலுத்தி உரிய தீர்வுகளை வழங்க நடவடிக்கை எடுத்தமைக்காக ஜனாதிபதிக்கு நன்றியும் பாராட்டும் தெரிவித்தனர்.
இந்நிகழ்வில் மகா சங்கத்தினருடன் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனெவி, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.








