அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் உள்ள பௌத்த விகாரை ஒன்றில் ஆறு சிறுமிகளைப் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில், இலங்கையில் பிறந்த 71 வயதுடைய பௌத்த பிக்கு ஒருவருக்கு 13 ஆண்டுகள் மற்றும் இரண்டு மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மெல்போர்னின் தென்கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள தம்ம சரண (Dhamma Sarana) விகாரையின் முன்னாள் தலைமைப் பிக்குவான நௌதுன்னே விஜித்தவுக்கு விக்டோரியா கவுண்டி நீதிமன்றம் இந்தத் தண்டனையை விதித்துள்ளது.
குறித்த பிக்கு, சிறுவர்கள் மீது பாலியல் ஊடுருவல் மேற்கொண்டமை தொடர்பான ஒன்பது குற்றச்சாட்டுகள் மற்றும் சிறுவர்களுடன் கண்ணியமற்ற செயலில் ஈடுபட்டமை தொடர்பான எட்டு குற்றச்சாட்டுகள் உள்ளிட்ட மொத்தம் 17 குற்றச்சாட்டுகளில் குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளார்.
1994ஆம் ஆண்டு முதல் 2002ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில், மெல்போர்னின் ஸ்பிரிங்வேல் மற்றும் கீஸ்பரோ பகுதிகளில் அமைந்திருந்த விகாரையுடன் தொடர்புடைய இடங்களில் இந்தச் சம்பவங்கள் இடம்பெற்றதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
குடும்பத்தினருடன் மத வழிபாடுகளில் பங்கேற்பதற்காக விகாரைக்குச் சென்ற சிறுமிகளைத் தனது இருப்பிடத்திற்கு வரவழைத்து பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. சில சந்தர்ப்பங்களில், சிறுமிகளின் பெற்றோர் அருகிலுள்ள அறைகளில் இருந்தபோதும் இச்செயல்கள் இடம்பெற்றதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
விகாரையின் தலைமைப் பிக்குவாக இருந்த தனது மதப் பதவியையும், பௌத்த சமூகத்தினர் தன் மீது கொண்டிருந்த நம்பிக்கையையும் குற்றவாளி தவறாகப் பயன்படுத்தியுள்ளதாக நீதிபதி பர்தீப் திவானா சுட்டிக்காட்டினார்.
இந்தச் சம்பவங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீண்டகால உளவியல் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும், அவர்களில் சிலர் பௌத்த மத நடைமுறைகள் தொடர்பிலும் மன உளைச்சலை எதிர்கொண்டு வருவதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
சம்பவங்கள் இடம்பெற்று பல ஆண்டுகளுக்குப் பின்னரே பாதிக்கப்பட்ட பெண்கள் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, 2023ஆம் ஆண்டு குறித்த பிக்கு மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.
விசாரணையின்போது குற்றச்சாட்டுகளை அவர் மறுத்திருந்ததுடன், இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறவில்லை என அவரது சட்டத்தரணிகள் வாதிட்டிருந்தனர்.
விதிக்கப்பட்ட 13 ஆண்டுகள் மற்றும் இரண்டு மாத சிறைத்தண்டனையில், பரோல் மூலம் விடுதலை பெறுவதற்குத் தகுதி பெறுவதற்கு முன்னர் குறைந்தது ஒன்பது ஆண்டுகள் மற்றும் நான்கு மாதங்கள் சிறையில் கழிக்க வேண்டியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தீர்ப்புக்குப் பின்னர் நீதிமன்றத்தில் இருந்த தனது ஆதரவாளர்களைப் பார்த்து குறித்த பிக்கு புன்னகைத்து கையசைத்தபோது, பாதிக்கப்பட்டவர்களில் சிலர் கோபத்தை வெளிப்படுத்தியதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இலங்கையில் பிறந்த நௌதுன்னே விஜித்த, தனது 15ஆவது வயதில் பௌத்த துறவறத்தில் இணைந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. பின்னர் சுவீடனுக்குக் குடிபெயர்ந்து அந்நாட்டுக் குடியுரிமையைப் பெற்ற அவர், 1994ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவுக்குச் சென்று தம்ம சரண விகாரையின் தலைமைப் பிக்குவாகப் பணியாற்றியுள்ளார்.
சிறைத்தண்டனையை நிறைவு செய்த பின்னர் அவர் நாடு கடத்தப்படுவதற்கான வாய்ப்புள்ளதாகவும், சுவீடனுக்குத் திரும்பத் தயாராக இருப்பதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும், குற்றவாளி மறதி நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவரது சட்டத்தரணிகள் முன்னதாக நீதிமன்றத்தில் கவலை வெளியிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.








