1983ஆம் ஆண்டு கறுப்பு ஜூலை இன வன்முறைகளால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களிடம் வருத்தம் தெரிவிப்பதுடன், மன்னிப்பும் கோருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
கறுப்பு ஜூலை வன்முறைகள் தொடர்பில் உண்மையைக் கண்டறிந்து, ஏற்பட்ட சேதங்களை மதிப்பீடு செய்வதற்கும், எதிர்காலத்தில் இவ்வாறான இன வன்முறைகள் மீண்டும் நிகழாமல் தடுப்பதற்கும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவொன்றை நியமிக்கக் கோரும் தனியார் பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இன, மத, சாதி, வர்க்க மற்றும் அரசியல் வேறுபாடுகளைக் கடந்து, அனைவரும் இலங்கையர் என்ற அடையாளத்துடன் நல்லிணக்கத்தையும் தேசிய ஒற்றுமையையும் வலுப்படுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தினார். நாட்டைவிட்டு வெளியேறியுள்ள இலங்கையர்களும் சகோதரத்துவத்தின் அடிப்படையில் தாய்நாட்டைக் கட்டியெழுப்ப ஒன்றிணைய வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார்.
மேலும், ஒற்றையாட்சி நாட்டுக்குள் 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களுடன் முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய அவர், மாகாண சபைத் தேர்தலையும் விரைவாக நடத்த வேண்டும் எனக் குறிப்பிட்டார்.
காணிகளை இழந்த மக்களுக்கு அவற்றை மீள வழங்குவதற்கான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்த வேண்டும் என்றும், காணிகளை மீள வழங்க முடியாத சந்தர்ப்பங்களில் சந்தை மதிப்பீட்டின் அடிப்படையில் உரிய இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
இன வேறுபாடுகளைக் கடந்து இலங்கையர் என்ற அடையாளத்தை வலுப்படுத்துவதுடன், நாட்டின் பிராந்திய ஒருமைப்பாட்டையும் இறையாண்மையையும் பாதுகாக்க அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் வலியுறுத்தினார்.







