இலங்கையின் பிரபல சமுத்திர உயிரியல் ஆய்வாளரான கலாநிதி ஆஷா டி வொஸிற்கு, கடல் உயிரினங்கள் தொடர்பான ஆராய்ச்சி மற்றும் பாதுகாப்புப் பணிகளைப் பாராட்டி ஐக்கிய இராச்சியத்தின் சமுத்திர உயிரியல் சங்கம் (Marine Biological Association) கௌரவப் பதவியை வழங்கியுள்ளது.
வட இந்தியப் பெருங்கடலில் வாழும் நீலத் திமிங்கலங்கள் உள்ளிட்ட கடல் பாலூட்டிகள் தொடர்பில் பல தசாப்தங்களாக அவர் மேற்கொண்ட ஆய்வுகள் மற்றும் கடல் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வுப் பணிகளைக் கௌரவிக்கும் வகையில், கடந்த நவம்பர் 18ஆம் திகதி இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
சமுத்திர உயிரியல் துறையில் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை வழங்கியவர்களுக்கு இக்கௌரவப் பதவி வழங்கப்படுவதாக அந்தச் சங்கம் தெரிவித்துள்ளது.
சர்வதேச அளவில் புகழ்பெற்ற சமுத்திர உயிரியலாளர், கடல்சார் கல்வியாளர் மற்றும் நூலாசிரியரான ஆஷா டி வொஸ், வட இந்தியப் பெருங்கடலில் நீலத் திமிங்கலங்கள் தொடர்பான நீண்டகால ஆய்வுகளிலும் முன்னோடியாகத் திகழ்கிறார்.
இலங்கையின் கடற்பரப்பில் வாழும் கடல் பாலூட்டிகள் தொடர்பான விஞ்ஞான அறிவை மேம்படுத்துவதிலும் அவரது ஆய்வுகள் முக்கிய பங்காற்றியுள்ளன.
மேலும், பொதுச் சொற்பொழிவுகள், நூல்கள், ஆவணப்படங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் ஊடாக கடல் பாதுகாப்பு மற்றும் சமுத்திர விஞ்ஞானம் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடம் கொண்டு சேர்த்து வருகிறார்.
இலங்கையின் கடல் வளங்களைப் பாதுகாப்பதற்காக அவர் ஆற்றிவரும் பணிகளுக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.







