தித்வா புயலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கம் இதுவரை முறையான நிவாரணங்களை வழங்கவில்லை எனக் குற்றஞ்சாட்டி, எதிர்வரும் நவம்பர் 29ஆம் திகதி நுவரெலியா நகரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டமொன்றை நடத்த மக்கள் போராட்ட முன்னணி தீர்மானித்துள்ளது.
இதனை முன்னிட்டு, ஆர்ப்பாட்டம் தொடர்பான விழிப்புணர்வுத் துண்டுப் பிரசுரங்களைப் பொதுமக்களுக்கு விநியோகிக்கும் நடவடிக்கை இன்று (23) மக்கள் போராட்ட முன்னணியின் ஏற்பாட்டில் வசந்த முதலிகே தலைமையில் முன்னெடுக்கப்பட்டது.
நுவரெலியா பேருந்து நிலையம் மற்றும் மத்திய சந்தை உள்ளிட்ட பகுதிகளில் இந்தத் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.
இதன்போது கருத்துத் தெரிவித்த வசந்த முதலிகே, புயலினால் மக்கள் பாதிக்கப்பட்டு நீண்டகாலமாகியும் அவர்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்கப்படவில்லை எனக் குற்றஞ்சாட்டினார்.
குறிப்பாக, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிரந்தர வீடுகளை அமைப்பதற்கான காணி ஒதுக்கீடுகள் முறையாக மேற்கொள்ளப்படவில்லை என்றும், வாடகை வீடுகளில் வசிக்கும் குடும்பங்களுக்கு ஆறு மாதங்களுக்கு மாத்திரமே வாடகை நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
எனவே, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணங்களை விரைவாக வழங்குதல், நிரந்தர வீடுகளை அமைப்பதற்கான காணிகளை ஒதுக்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து நவம்பர் 29ஆம் திகதி இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக மக்கள் போராட்ட முன்னணி தெரிவித்துள்ளது.







