16 வயதுடைய சிறுமியைப் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியமை உள்ளிட்ட நான்கு குற்றச்சாட்டுகளில் குற்றவாளியாகக் காணப்பட்ட திருமணமான பொலிஸ் உப பரிசோதகர் ஒருவருக்கு 50 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதித்து குருநாகல் மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குருநாகல் மேல் நீதிமன்ற நீதிபதி லால் ரணசிங்க பண்டார இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளதுடன், 50 ஆண்டுகள் சிறைத்தண்டனையையும் 15 ஆண்டுகளில் அனுபவித்து முடிக்கும் வகையில் ஒரே நேரத்தில் நடைமுறைப்படுத்தவும் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 10 இலட்சம் ரூபாய் நட்டஈடு வழங்குமாறும், நான்கு குற்றச்சாட்டுகளுக்கும் தலா 50,000 ரூபாய் வீதம் மொத்தம் 2 இலட்சம் ரூபாய் அபராதம் செலுத்துமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.
சிறுமியின் தாயார் வெளிநாட்டில் பணிபுரிந்து வந்த நிலையில், அவர் தனது பாட்டியின் வீட்டில் தங்கியிருந்து பாடசாலைக்குச் சென்று வந்துள்ளார்.
இதன்போது, சிறுமி மற்றொரு தரப்பினரால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளை குறித்த பொலிஸ் உப பரிசோதகர் மேற்கொண்டுள்ளார்.
விசாரணை என்ற போர்வையில் சிறுமியின் தந்தையுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக்கொண்ட அவர், சிறுமி வீட்டில் தனியாக இருந்த சந்தர்ப்பங்களில் அங்கு சென்று பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டமை நீதிமன்ற விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சாட்சியங்கள் மற்றும் விசேட சட்ட மருத்துவ அறிக்கைகள் உள்ளிட்ட ஆதாரங்களைப் பரிசீலித்த நீதிபதி, நான்கு குற்றச்சாட்டுகளிலும் அவரைக் குற்றவாளியாக அறிவித்து இந்தத் தண்டனையை விதித்துள்ளார்.








