வடக்கு மற்றும் மலையக ரயில் பாதைகளில் வழமையாக முன்னெடுக்கப்பட்டு வந்த ரயில் சேவைகளின் எண்ணிக்கை பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளதாக ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
‘டித்வா’ (Ditwah) சூறாவளிக்கு முன்னர் வடக்கு ரயில் பாதையில் நாளொன்றுக்கு 18 ரயில் சேவைகள் இடம்பெற்ற நிலையில், தற்போது 8 சேவைகள் மாத்திரமே இயக்கப்படுவதாக சங்கத்தின் செயலாளர் கசுன் சாமர ஜயசேகர தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, புதன்கிழமைகளில் நகரங்களுக்கு இடையிலான அதிவேக ரயில்கள் மற்றும் இரவு அஞ்சல் ரயிலைத் தவிர, சாதாரண பயணிகள் பயணிப்பதற்கான ஏனைய ரயில் சேவைகள் இடம்பெறுவதில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், ‘யாழ் தேவி’ கடுகதி ரயில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் மாத்திரமே இயக்கப்படுவதால், வடக்கு நோக்கிப் பயணிக்கும் பொதுமக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, மலையக ரயில் பாதையில் கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை, மாத்தளை, கண்டி மற்றும் ஹட்டன் உள்ளிட்ட பகுதிகளுக்கு நாளொன்றுக்கு இயக்கப்பட்ட 42 சரக்கு மற்றும் பயணிகள் ரயில் சேவைகளில் தற்போது 8 சேவைகள் மட்டுமே முன்னெடுக்கப்படுகின்றன. எஞ்சிய 34 சேவைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சங்கம் தெரிவித்துள்ளது.
கடந்த மாதம் கம்பளை வரையிலான ரயில் போக்குவரத்து மீள ஆரம்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மலையக ரயில் சேவைகளை வழமைக்குக் கொண்டுவருமாறு தமது சங்கம் தொடர்ச்சியாகக் கோரிக்கை விடுத்து வந்தபோதிலும், இதுவரை சாதகமான பதில் கிடைக்கவில்லை என கசுன் சாமர ஜயசேகர மேலும் தெரிவித்துள்ளார்.
ரயில் சேவைகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதால் வடக்கு மற்றும் மலையகப் பகுதிகளுக்குப் பயணிக்கும் பொதுமக்கள் எதிர்கொள்ளும் சிரமங்களைக் கருத்திற்கொண்டு, சேவைகளை விரைவாக வழமைக்குக் கொண்டுவர உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.








