இலங்கையின் இலத்திரனியல் பயண அனுமதிப்பத்திரம் (ETA) வழங்கும் இணையதளம் தற்காலிகமாகச் செயலிழந்துள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது.
கணினிக் கட்டமைப்பில் முன்னெடுக்கப்படும் பராமரிப்புப் பணிகள் காரணமாக இந்தத் தடங்கல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், இலங்கைக்கு வருகை தரும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள், முன்கூட்டியே ETA அனுமதியைப் பெறாமல் விமானங்களில் பயணிக்க தற்காலிக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
எனினும், பாகிஸ்தான், கமரூன், நைஜீரியா, ஐவரி கோஸ்ட், கானா, ஆப்கானிஸ்தான் மற்றும் சிரியா ஆகிய நாடுகளின் பிரஜைகளுக்கு இந்தச் சலுகை பொருந்தாது என சிங்கப்பூரிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
இந்தத் தற்காலிக சலுகைக்குத் தகுதியான பயணிகள் இலங்கையை வந்தடைந்த பின்னர், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் உள்ளிட்ட உரிய நுழைவாயில்களில் ETA அல்லது சுற்றுலா விசாவைப் பெற்றுக்கொள்ள வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், இந்தச் சலுகை விசா நிபந்தனைகளை முழுமையாக நீக்குவதாக அமையாது. அனைத்து வெளிநாட்டுப் பயணிகளும் வழமையான குடிவரவுப் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள்.
மேலும், இலங்கைக்குள் நுழைவதற்கான இறுதி அனுமதியை வழங்கும் அதிகாரம் குடிவரவு அதிகாரிகளிடமே காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ETA இணையதளத்தின் சேவைகள் வழமைக்குத் திரும்பியதும், மீண்டும் பழைய நடைமுறைகள் அமுல்படுத்தப்படுவது தொடர்பில் அறிவிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.







