அரச வாகனத்தைத் தனிப்பட்ட தேவைக்காகப் பயன்படுத்திய விவகாரத்தில், உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைய முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம். பௌசி பகிரங்க மன்னிப்பு விளம்பரத்தை வெளியிட்டுள்ளார்.
குறித்த விளம்பரம் நேற்று (24) சிங்கள அரச நாளிதழ் ஒன்றில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
கடந்த செப்டெம்பர் 29ஆம் திகதி இந்த வழக்கில் தீர்ப்பளித்த உயர்நீதிமன்றம், பௌசி அரசாங்கத்தின் ஒருங்கிணைக்கப்பட்ட நிதியத்திற்கு சுமார் 66 இலட்சம் ரூபாவைச் செலுத்த வேண்டுமெனவும், சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழ்களில் பகிரங்க மன்னிப்பு விளம்பரங்களை வெளியிட வேண்டுமெனவும் உத்தரவிட்டிருந்தது.
இலங்கையின் அனர்த்த முகாமைத்துவ நடவடிக்கைகளுக்காக நெதர்லாந்து அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட வாகனத்தைத் தனது சொந்தப் பயன்பாட்டிற்குப் பயன்படுத்தியதன் மூலம், அரசியலமைப்பின் 12(1) உறுப்புரையின் கீழ் உறுதிப்படுத்தப்பட்ட சமத்துவத்திற்கான அடிப்படை உரிமையை அவர் மீறியுள்ளதாக நீதிமன்றம் தீர்மானித்திருந்தது.

இந்தச் செயலைப் பொதுமக்களின் நம்பிக்கைக்குச் செய்யப்பட்ட துரோகம் எனவும் நீதிமன்றம் கடுமையாக விமர்சித்திருந்தது.
பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன தலைமையிலான மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம், இலங்கை வர்த்தகச் சபையின் முன்னாள் தலைவர் சந்திர ஜெயரத்ன தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை விசாரித்தபோதே இந்தத் தீர்ப்பை வழங்கியிருந்தது.
மேலும், குறித்த வாகனத்தின் புகைப்படத்துடன் அரைப் பக்க அளவிலான மன்னிப்பு விளம்பரங்களை ‘சிலுமின’, ‘சண்டே ஒப்சர்வர்’ மற்றும் ‘தினகரன்’ ஆகிய அரச நாளிதழ்களில் வெளியிடுமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.








