நிலக்கரி கொள்வனவு தொடர்பான முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்திவரும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்னிலையில், எதிர்வரும் 26ஆம் திகதி ஆஜராகுமாறு முன்னாள் எரிசக்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவுக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
ஆணைக்குழு முன்னிலையில் இதுவரை வழங்கப்பட்ட சாட்சியங்களை ஆராய்ந்ததன் அடிப்படையில், விசாரணைக்காக அழைக்கப்பட வேண்டிய தரப்பினராக அவரைப் பெயரிடத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை கப்பல் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் உள்ளிட்ட பல சாட்சியாளர்கள் முன்வைத்த தகவல்களின் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், ஆணைக்குழுவில் சாட்சியமளித்த மைத்திரி குணரத்னவும் சம்பிக்க ரணவக்கவின் பெயரைக் குறிப்பிட்டு பல்வேறு தகவல்களை முன்வைத்துள்ளார். அமைச்சின் முன்னாள் செயலாளர் படகொட தொடர்பான தகவல்களும் விசாரணைகளின்போது வெளியாகியுள்ளன.
மஹிந்த ராஜபக்ஷ மற்றும் நல்லாட்சி அரசாங்கங்களின் ஆட்சிக் காலங்களில் எரிசக்தி அமைச்சராகப் பதவி வகித்தபோது, நிலக்கரி கொள்வனவு நடவடிக்கைகளில் அமைச்சரவையின் அனுமதியின்றிச் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டதாகச் சாட்சியாளர் ஒருவர் ஆணைக்குழுவில் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
2025ஆம் ஆண்டுக்கான நீண்டகால நிலக்கரி கொள்வனவின்போது தரமற்ற நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டமை தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் இந்த விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு நியமிக்கப்பட்டது.
உயர் நீதிமன்ற நீதியரசர் கிஹான் குலதுங்க, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் ஆதித்ய படபெந்திகே மற்றும் மேல் நீதிமன்ற நீதிபதி சஞ்சீவ சோமரத்ன ஆகியோர் தலைமையில் ஆணைக்குழுவின் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதுவரை சுமார் 20 பேர் விசாரணைக்காக அழைக்கப்பட வேண்டிய தரப்பினராகப் பெயரிடப்பட்டுள்ளதுடன், அவர்களிடமிருந்து சாட்சியங்களையும் வாக்குமூலங்களையும் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.








