மார்வெல் நிறுவனத்தின் ‘அவெஞ்சர்ஸ்’ திரைப்படங்களில் இடம்பெறும் ஆறு இரத்தினக் கற்கள் பதிக்கப்பட்ட கையுறையைப் போன்ற மாதிரி ஒன்று, அபுதாபியில் எதிர்வரும் டிசம்பர் 8ஆம் திகதி ஏலத்தில் விடப்படவுள்ளது.
2018ஆம் ஆண்டு வெளியான ‘அவெஞ்சர்ஸ்: இன்ஃபினிட்டி வார்’ திரைப்படத்தில், ஆறு வெவ்வேறு சக்திகளைக் கொண்ட ரத்தினக் கற்கள் பதிக்கப்பட்ட கையுறையைப் பயன்படுத்தி வில்லன் உலகின் பாதியை அழிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இதன் தொடர்ச்சியான ‘அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்’ திரைப்படத்திலும் இந்தக் கையுறை காணப்பட்டது.
இந்நிலையில், திரைப்படத்தில் காணப்படும் கையுறையை ஒத்த வகையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த மாதிரியில் மாணிக்கம், கோமேதகம், மரகதம் மற்றும் மஞ்சள் வைரம் உள்ளிட்ட ஆறு உண்மையான ரத்தினக் கற்கள் பதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தக் கையுறை மாதிரி 25 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு ஏலத்தில் விடப்படவுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
டிசம்பர் 8ஆம் திகதி அபுதாபியில் ஏலம் நடைபெறவுள்ளதுடன், அதன் பின்னர் இந்தக் கையுறை பஹ்ரைனில் காட்சிக்கு வைக்கப்படவுள்ளது.








