இலங்கையில் பயன்பாட்டிலிருந்து அகற்றப்படும் மின்சார வாகனங்களின் மின்கலங்களைச் சேகரித்தல், மறுசுழற்சி செய்தல் மற்றும் பாதுகாப்பாக அகற்றுவதற்கான முறையான தேசிய முகாமைத்துவ முறைமை இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை என தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது.
மின்சார வாகனங்களின் பயன்பாடு மற்றும் அவற்றின் மின்கலங்களால் ஏற்படக்கூடிய சுற்றுச்சூழல் பாதிப்புகள் தொடர்பான சிறப்பு கணக்காய்வு அறிக்கையிலேயே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பயன்படுத்தப்பட்ட சில மின்கலங்கள் திறந்தவெளிகளில் சேமித்து வைக்கப்படுவதுடன், அவற்றைச் சேகரித்தல், கொண்டு செல்லுதல் மற்றும் அகற்றுவதற்கான தரப்படுத்தப்பட்ட நடைமுறைகளும் இல்லையென கணக்காய்வில் தெரியவந்துள்ளது.
மின்கல முகாமைத்துவத்துடன் தொடர்புடைய அரச நிறுவனங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பும் போதுமானதாக இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் பயன்பாட்டிலிருந்து அகற்றப்படும் லித்தியம்-அயன் மின்கலங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது சுற்றுச்சூழல் மாசுபாட்டு அபாயம் அதிகரிக்கக்கூடும் என்பதால், உரிய விதிமுறைகள் மற்றும் கண்காணிப்பு முறைமைகளை விரைவாக நடைமுறைப்படுத்த வேண்டும் என தேசிய கணக்காய்வு அலுவலகம் வலியுறுத்தியுள்ளது.








