கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுமார் 5.1 கோடி ரூபா பெறுமதியான ‘குஷ்’ வகை போதைப்பொருளுடன் 24 வயதுடைய இந்தியப் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வியட்நாம் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான VN-671 விமானம் மூலம், வியட்நாமின் ஹோ சி மின் நகரிலிருந்து இன்று அதிகாலை 1.15 மணியளவில் குறித்த நபர் இலங்கையை வந்தடைந்துள்ளார்.
அவர் தனது பயணப் பொதிகளில் ஆடைகளுக்கு இடையில் ஏழு பொதிகளில் மறைத்து சுமார் 5.1 கிலோகிராம் ‘குஷ்’ வகை போதைப்பொருளைக் கொண்டு வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
விமான நிலையத்திலிருந்து வெளியேற முயன்றபோது, அங்கு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் அவரைக் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இந்தியப் பிரஜை மேலதிக விசாரணைகளுக்காகப் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.








