அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் மத்தியில் அச்சநிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நிந்தவூர் அல் அஷ்ரக் முஸ்லிம் மகா வித்தியாலய வளாகத்திற்குள் புகுந்த காட்டு யானைகள், அங்கிருந்த சுமார் 15 பாம் மரங்களைச் சேதப்படுத்தியுள்ளன.
நேற்று முன்தினம் (25) இரவு இடம்பெற்ற இச்சம்பவம், பாடசாலை வளாகத்தின் பாதுகாப்பு தொடர்பில் கவலைகளை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களாக நாவிதன்வெளி, கல்முனை, சம்மாந்துறை மற்றும் நிந்தவூர் உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதுடன், அவற்றால் பொதுமக்களின் உடைமைகளுக்கும் சேதங்கள் ஏற்பட்டு வருகின்றன.

இதேவேளை, கடந்த 24ஆம் திகதி நிந்தவூர், கோவில் வீதி, 19ஆம் பிரிவைச் சேர்ந்த சுமார் 38 வயதுடைய மீராதஸ்லிம் என்பவர் காட்டு யானை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
மேலும், நேற்று இரவு சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயம் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் காட்டு யானைகள் வீதிகளில் நடமாடியுள்ளன.
அத்துடன், கல்முனையில் அமைந்துள்ள லங்கா சதோச களஞ்சியத்தின் முன்பக்கக் கதவையும் காட்டு யானைகள் சேதப்படுத்தியுள்ளதுடன், அங்கிருந்த பொருட்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன.
தொடர்ச்சியாக அதிகரித்து வரும் காட்டு யானைகளின் நடமாட்டத்தால் பொதுமக்களின் உயிருக்கும் உடைமைகளுக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள நிலையில், இப்பிரச்சினையைக் கட்டுப்படுத்தவும், மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.








