இந்த ஆண்டின் நான்காம் காலாண்டிற்கான மின்சாரக் கட்டணத்தை 2.88 சதவீதத்தால் அதிகரிப்பதற்கு நேஷனல் சிஸ்டம் ஒப்பரேட்டர் (NSO) நிறுவனம் முன்மொழிந்துள்ள நிலையில், மின்சாரக் கட்டணத்தை குறைந்தபட்சம் 10 சதவீதத்தால் குறைக்க முடியும் என மின் பாவனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
நாட்டில் பெய்துவரும் பலத்த மழையினால் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதுடன், நீர்மின் உற்பத்தியை அதிகரிப்பதற்கான வாய்ப்புகளும் உருவாகியுள்ளன. இதன் காரணமாக மின்சார உற்பத்திச் செலவைக் குறைத்து, நுகர்வோருக்கான கட்டணத்தையும் குறைக்க முடியும் என அச்சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த மின் பாவனையாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் சஞ்சீவ தம்மிக, நான்காம் காலாண்டிற்கான மின்சாரக் கட்டணத்தை 2.88 சதவீதத்தால் அதிகரிக்க NSO நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் ஆரம்பகட்ட ஆய்வுகளின்படி, முன்மொழியப்பட்ட கட்டண அதிகரிப்பை 1.46 சதவீதமாகக் குறைக்க முடியும் எனத் தெரியவந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கிடைக்கப்பெற்றுள்ள தரவுகளின் அடிப்படையில், மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்குப் பதிலாக குறைந்தபட்சம் 10 சதவீதத்தால் குறைப்பதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
தற்போது நிலவும் மழையுடனான வானிலை காரணமாகப் பல நீர்த்தேக்கங்கள் நிரம்பியுள்ள நிலையில், அதிக செலவுடைய மின்சார உற்பத்தி மூலங்களில் தங்கியிருப்பதைக் குறைத்து, நீர்மின் உற்பத்தியை அதிகரிக்க முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, மின்சாரக் கட்டணத் திருத்தத்தை மேற்கொள்ளும்போது நீர்மின் உற்பத்தியின் அதிகரிப்பு மற்றும் உற்பத்திச் செலவில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் ஆகியவற்றைக் கருத்திற்கொள்ள வேண்டும் என மின் பாவனையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதற்கிடையில், NSO நிறுவனம் சமர்ப்பித்துள்ள கட்டணத் திருத்த முன்மொழிவு தொடர்பில் பொதுமக்களின் கருத்துக்களைப் பெறும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தமித்த குமாரசிங்க தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் அரசாங்கத்தினால் இதுவரையில் உத்தியோகபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.








