காலி, கொக்கலையில் தொடருந்துடன் மோதிய பேருந்தின் பயணிகள் போக்குவரத்து அனுமதிப்பத்திரம் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 25ஆம் திகதி பிற்பகல், ஹபராதுவ, கொக்கலையில் அமைந்துள்ள மார்ட்டின் விக்ரமசிங்க நினைவு அருங்காட்சியகத்திற்குச் சுற்றுலா சென்ற மாணவர்களை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்து, தொடருந்து கடவையில் வைத்து தொடருந்துடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றது.
பெலியத்த தொடருந்து நிலையத்திலிருந்து கொழும்பு, மருதானை நோக்கிப் பயணித்த விரைவு தொடருந்துடன் பேருந்து மோதியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கொட்டாவைப் பகுதியிலிருந்து மாணவர்கள், பயிற்சி வகுப்பு ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களை ஏற்றிச் சென்ற குறித்த பேருந்தில் 14 ஆசிரியர்கள், 6 பெற்றோர்கள் மற்றும் 41 மாணவர்கள் என மொத்தம் 61 பேர் பயணித்துள்ளனர்.
இந்த விபத்தில் மாணவர்கள் உள்ளிட்ட 13 பேர் காயமடைந்ததுடன், அவர்கள் உணவட்டுன மற்றும் காலி தேசிய வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பான விசாரணைகளின்போது, குறித்த பேருந்து சுற்றுலா சேவைக்கான உரிய அனுமதியின்றி மாணவர்களை ஏற்றிச் சென்றமை தெரியவந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, தென் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர், பேருந்தின் பயணிகள் போக்குவரத்து அனுமதிப்பத்திரம் தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.
மேலும், நீதிமன்ற நடவடிக்கைகளின் பின்னர், பேருந்தின் அனுமதிப்பத்திரத்தை நிரந்தரமாக இரத்து செய்வதா அல்லது குறிப்பிட்ட காலத்திற்கு இடைநிறுத்துவதா என்பது குறித்து தீர்மானிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, விபத்து தொடர்பில் பேருந்தின் சாரதி மற்றும் உதவியாளர் ஆகியோர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.








