இந்தியாவில் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்த பின்னர் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் ஒருவர், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2015ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் அமைப்பை மீண்டும் கட்டியெழுப்ப முயன்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் குறித்த நபர் இந்திய பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டார்.
இதனையடுத்து, இந்திய நீதிமன்றத்தில் முன்னெடுக்கப்பட்ட வழக்கு விசாரணையில் அவர் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
அவருக்கான சிறைத்தண்டனை நிறைவடைந்த நிலையில், இலங்கைக்கு நாடு கடத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. இதற்கமைய, நேற்று (26) இரவு அவர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார்.
இதன்போது, விமான நிலையத்தில் தயார் நிலையில் இருந்த பொலிஸ் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவு அதிகாரிகள் அவரைக் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர் யாழ்ப்பாணம், சண்டிலிப்பாய் பகுதியைச் சேர்ந்த 50 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
உளவுப் பிரிவினரிடமிருந்து கிடைத்த தகவல்களின் அடிப்படையில், சந்தேகநபரிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்காக 72 மணிநேர தடுப்புக் காவல் உத்தரவு பெறப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினர் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.







