கொழும்பில் நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் முன்னாள் மாகாண ஆளுநர் ரஜித் கீர்த்தி தென்னகோன் தெரிவிக்கையில், சமர்ப்பிக்கப்பட்டுள்ள புதிய ஒதுக்கீட்டு மசோதாவின்படி, ஜனாதிபதி அலுவலகத்திற்காக 11.2 பில்லியன் ரூபா மாபெரும் தொகை ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அதன்படி நாளுக்குரிய செலவு 307 இலட்சம் ரூபாவாக உயர்ந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
அரசின் புதிய பட்ஜெட் மதிப்பீட்டுப் புள்ளிவிபரங்களைப் பகுப்பாய்வு செய்த முன்னாள் ஆளுநர், அரசின் மொத்தச் செலவு 9,920 பில்லியன் ரூபாவாக மதிப்பிடப்பட்டுள்ளதாகச் சுட்டிக் காட்டினார். அதில் 4,820 பில்லியன் ரூபா அதாவது மொத்த அரச செலவில் 49% பெறப்பட்டுள்ள கடன்கள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய வட்டித் தவணைகளைச் செலுத்துவதற்காக மட்டுமே செலவிடப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், நாட்டின் மொத்தச் செலவில் 26.6% நேரடியாக ஜனாதிபதியின் கீழ் உள்ள அமைச்சுக்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் வெளிப்படுத்தினார். அந்தச் செலவுகள் பின்வருமாறு:
- நிதி அமைச்சுக்கு – 858 பில்லியன் ரூபா
- பாதுகாப்பு அமைச்சுக்கு – 458 பில்லியன் ரூபா
- டிஜிட்டல் அமைச்சுக்கு – 17 பில்லியன் ரூபா
- ஜனாதிபதி அலுவலகத்திற்கு – 11.2 பில்லியன் ரூபாஅரசுச் செய்திகள்
ஜனாதிபதி அலுவலகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள 11.2 பில்லியன் ரூபா தொகையை ஆண்டின் 365 நாட்களால் வகுக்கும் போது ஒரு நாளின் செலவு 307 இலட்சம் ரூபாவாக அமைகிறது என்பதைச் சுட்டிக் காட்டிய அவர், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்கள் எதிர்க்கட்சியில் இருந்தபோது முந்தைய ஆட்சியாளர்களின் 2.6 பில்லியன் என்ற அலுவலகச் செலவுகளை மணி மற்றும் நிமிட கணக்கில் கணித்து மேடைகளை அதிரவைத்து ஆட்சிக்கு வந்த விபரங்களை நினைவுகூர்ந்தார். அன்று அந்தச் செலவுகளை முழுமையாகப் பொய்மை மற்றும் வீண்விரயம் என இகழ்ந்த தலைவர்கள், இன்று ஆட்சிக்கு வந்து அந்தச் செலவை விட ஐந்தாறு மடங்கு அதிகரித்துக் கொண்டுள்ளதாக அவர் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்தார்.
மேலும், அரசின் இத்தகைய தன்னிச்சையான செயற்பாடுகளையும் செலவுகளையும் விமர்சிக்கும் அனைத்துத் தரப்பினரையும் ‘ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள்’ மற்றும் ‘பயங்கரவாதிகள்’ என முத்திரை குத்த நிர்வாகம் முயல்வதாகவும் ரஜித் கீர்த்தி தென்னகோன் குற்றம் சாட்டினார். அரசாங்கசார்பற்ற நிறுவனங்களை அடக்குவதன் மூலமும் மக்களிடையே உண்மைத் தகவல்கள் செல்வதைத் தடுப்பதன் மூலமும் அடக்குமுறைச் சட்டங்களைக் கொண்டுவர அரசாங்கம் தயாராகி வருவதாகவும், ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காக இத்தகைய ஆட்சிகளைத் தோற்கடிக்க வேண்டும் எனவும் அவர் மேலும் வலியுறுத்தினார்.







