ஜனாதிபதி அலுவலகத்திற்கு நாளொன்றுக்கு 307 இலட்சம் ரூபா செலவா? – முன்னாள் ஆளுநர் ரஜித் கீர்த்தி தென்னகோன் கேள்வி
ஜனாதிபதி அலுவலகத்திற்காக புதிய ஒதுக்கீட்டு மசோதாவில் 11.2 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், இதன்படி நாளொன்றுக்கான செலவு 307 இலட்சம் ரூபாவாக அமைவதாகவும் முன்னாள் மாகாண ஆளுநர் ரஜித் கீர்த்தி தென்னகோன் குற்றம் சாட்டியுள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த அவர், அரசாங்கத்தின் புதிய வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகள் தொடர்பில் பல்வேறு கேள்விகளை எழுப்பினார்.
அரசாங்கத்தின் மொத்தச் செலவு 9,920 பில்லியன் ரூபாவாக மதிப்பிடப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், அதில் 4,820 பில்லியன் ரூபா, அதாவது மொத்தச் செலவில் சுமார் 49 சதவீதம், பெறப்பட்ட கடன்களையும் அவற்றுக்கான வட்டியையும் செலுத்துவதற்காக ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
மேலும், நாட்டின் மொத்த அரச செலவில் 26.6 சதவீதம் ஜனாதிபதியின் கீழ் உள்ள அமைச்சுக்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அதன்படி, நிதி அமைச்சுக்கு 858 பில்லியன் ரூபாவும், பாதுகாப்பு அமைச்சுக்கு 458 பில்லியன் ரூபாவும், டிஜிட்டல் அமைச்சுக்கு 17 பில்லியன் ரூபாவும், ஜனாதிபதி அலுவலகத்திற்கு 11.2 பில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
முந்தைய ஆட்சியாளர்களின் செலவுகளை விமர்சித்த அநுர!
ஜனாதிபதி அலுவலகத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள 11.2 பில்லியன் ரூபாவை ஆண்டின் 365 நாட்களால் வகுக்கும்போது, நாளொன்றுக்கு சுமார் 30.7 மில்லியன் ரூபா, அதாவது 307 இலட்சம் ரூபா செலவாகிறது என ரஜித் கீர்த்தி தென்னகோன் சுட்டிக்காட்டினார்.
எதிர்க்கட்சியில் இருந்தபோது, முந்தைய ஆட்சியாளர்களின் ஜனாதிபதி அலுவலகச் செலவுகள் தொடர்பில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்ததாகவும் அவர் நினைவுபடுத்தினார்.
அன்றைய ஆட்சியாளர்களின் அலுவலகச் செலவுகள் 2.6 பில்லியன் ரூபாவாக இருந்தபோது, அவற்றை மணி மற்றும் நிமிடக் கணக்கில் விமர்சித்து, வீண் விரயங்களை ஒழிப்பதாகக் கூறி மக்கள் மத்தியில் பிரசாரம் செய்தவர்கள், இன்று ஆட்சிக்கு வந்த பின்னர் அதைவிடப் பல மடங்கு அதிகமான தொகையை ஒதுக்கியுள்ளதாக அவர் குற்றம் சாட்டினார்.
விமர்சிப்பவர்களை அடக்க முயற்சிக்கிறதா அரசாங்கம்?
அரசாங்கத்தின் செலவினங்களையும் செயற்பாடுகளையும் விமர்சிப்பவர்களை ‘ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள்’, ‘பயங்கரவாதிகள்’ என முத்திரை குத்துவதற்கு நிர்வாகம் முயற்சிப்பதாகவும் ரஜித் கீர்த்தி தென்னகோன் குற்றம் சாட்டினார்.
அரச சார்பற்ற நிறுவனங்களை அடக்குவதன் மூலமும், மக்களுக்குத் தகவல்கள் சென்றடைவதைத் தடுப்பதன் மூலமும், அடக்குமுறைச் சட்டங்களைக் கொண்டுவர அரசாங்கம் தயாராகி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கு இத்தகைய ஆட்சிகளைத் தோற்கடிக்க வேண்டியது அவசியம் எனவும் அவர் வலியுறுத்தினார்.








